World

இந்தோனீசிய விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது – 188 பேரின் நிலை என்ன?

ஜகார்த்தாவில் இருந்து இன்று காலை புறப்பட்ட இந்தோனீசிய பயணிகள் விமானம் கடலில் விழுந்தது என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 188 பேர் இருந்துள்ளனர்.

( 178 பெரியவர்கள், 1 குழந்தை, இரண்டு கைக்குழந்தைகள், 2 விமானிகள், 5 விமானப் பணியாளர்கள்).

ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானம் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பன்ங்கால் பினாங் நகரத்துக்கு சென்று கொண்டிருந்தது.

இழுவைப் படகு ஒன்று விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பதைப் பார்த்ததாக இந்தோனீசிய துறைமுக அதிகாரி சுயாதி என்பவர் கூறியதாக இந்தோனீசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 6.20க்கு (கிரீன்விச் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 23.30) இந்த புறப்பட்ட இந்த விமானம் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ வகையைச் சேர்ந்தது. இந்த மாடல் விமானங்கள் 2016-ம் ஆண்டு முதல்தான் பயன்பாட்டில் உள்ளன.

விமானம் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் யூசூஃப் லத்தீஃப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விமானத்துக்கு என்ன ஆனது என்பது குறித்து தங்களுக்கு இன்னும் தெரியவில்லை என ‘லயன் ஏர்’ விமான நிறுவன அதிகாரி ஒருவர் முன்னர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த நிறுவனம் இந்தோனீசியாவை மையமாக வைத்து செயல்படும், குறைந்த கட்டண விமான நிறுவனம் ஆகும்.

எல்லா தகவல்களையும் திரட்டிவருவதாகவும், தற்போது எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என்றும் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எட்வார்ட் சிரய்ட் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

இந்தோனீசியா ஆசியக் கண்டத்தில் உள்ள மிகப்பெரிய தீவுக்கூட்டம். ஏராளமான சிறு தீவுகள் நிரம்பிய இந்த நாட்டின் உள்நாட்டுப் போக்குவரத்து பெரிதும் விமானங்களையே நம்பியுள்ளது.

அறிமுகப்படுத்தியதில் இருந்தே சிக்கல்

‘போயிங் 737 மேக்ஸ் 8’ வகை விமானத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே சிக்கல்கள் இருந்து இருந்து வருவதாக விமானத்துறை வல்லுநர் ஜெர்ரி சோஜட்மேன் பிபிசியிடம் தெரிவித்தார். குறிப்பாக சமநிலையில் பறப்பதில் பிரச்சினை இருந்ததாக அவர் கூறுகிறார்.

2013ம் ஆண்டு பாலி தீவு அருகே லயன் ஏர் விமானம் ஒன்று கடலில் விழுந்தது. ஆனால், அதில் இருந்த பயணிகள் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். லயன் ஏர் விமான நிறுவனம் இந்தோனீசியாவில் இருந்து செயல்படும் நிறுவனம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading