Lead News

இலங்கைத் தமிழ் மக்களுக்கு சர்வதேசம் துரோகமிழைப்பு! – ‘சனல் 4’ இன் கெலும் மக்ரே காட்டம்

சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழ் மக்களுக்கான அதன் சொந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் துரோகமிழைத்து வருகின்றது எனப் பிரிட்டனின் பிரபல ஊடகவியலாளரும் சனல் 4 இல் வெளியான ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ விவரணக் காணொளியின் இயக்குநருமான கெலும் மக்ரே குற்றம்
சாட்டியுள்ளார்.

இலங்கைப் படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை நீக்கிக்கொள்ளுமாறு எதிர்வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின்போது யோசனையொன்றை முன்வைக்கவுள்ளமையுடன் பின்னர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா அமர்வின்போது இந்த யோசனையைப் பிரேரணையாகக் கொண்டுவரத் தாங்கள் திட்டமிட்டுள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய கருத்துக்கள் தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மக்ரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் முக்கியஸ்தர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தபோது வெளியிட்ட கருத்து தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்த மனித உரிமை ஆர்வலர் மரியோ அருள், “இதிலே மிகவும் மோசமான விடயம் யாதெனில் இதற்குப் பின்னரும் கூட இலங்கையின் முன்னேற்றம் தொடர்பாக நாங்கள் உற்சாகமடைந்துள்ளோம் என்ற பல்லவியைப் பாடுவதை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட தரப்புகள் மாற்றிக்கொள்ளமாட்டா. இலங்கை அரசு நீதியை ஒருபோதும் வழங்கமாட்டாது என்ற விடயத்தைத் தான் தமிழ் மக்கள் தொடர்ந்தும் கூறி வந்துள்ளனர்” – எனக் கூறியிருந்தார்.

இதனை மேற்கோள் காண்பித்து வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவிலே கெலும் மக்ரே, “சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழ் மக்களுக்கான அதன் சொந்த வாக்குறுதிகளுக்கு துரோகமிழைத்து வருகின்றது. இலங்கையில் நீதிக்குத் தொடர்ந்தும் துரோகமிழைக்கப்படுகின்றது” எனப் பதிவிட்டிருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதியின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என யஸ்மின் சூக்காவின் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் ஜனாதிபதி மைத்திரியின் கருத்துத் தொடர்பில் தமது கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading