Local

மஹிந்த – மோடி இவ்வாரம் மாலைதீவில் முக்கிய பேச்சு?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில், இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, இந்த வாரக் கடைசியில் மாலைதீவுக்குப் பயணம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலைதீவில் அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் சோலி எதிர்வரும் 17ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க, இந்தியப் பிரதமர் மோடி மாலேக்கு எதிர்வரும் 17ஆம் திகதி செல்லவுள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வுக்குச் செல்லுமாறும், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேச முடியும் என்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

மாலைதீவுக்குச் சென்றால், மோடியைச் சந்திக்க முடியுமா என்று மஹிந்த ராஜபக்ஷவினால் கேட்க முடியும். அவ்வாறான சந்திப்பில், நாடாளுமன்றக் கலைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவருக்குத் தெளிவுபடுத்த முடியும் என்றும் மஹிந்தவுக்கு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், இந்தியாவுடனான எந்த உத்தியோகபூர்வ தொடர்பாடல்களும் நிகழவில்லை. ரணில், மஹிந்த ஆகிய இரண்டு தரப்புகளுடனும் இந்தியா தொடர்புகளை வைத்திருப்பதை தவிர்த்துள்ளது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவை எந்த நாடும் அங்கீகரிக்காத நிலையில், பொது நிகழ்வு ஒன்றில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலகுவாகச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் என்றும், அதனை வைத்து, சர்வதேச பரப்புரைகளை மேற்கொள்ளலாம் என்றும் மஹிந்தவுக்கு ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading