Local

அகில இலங்கை வாலிப முன்னணியின் விசேட பொதுக்கூட்டம்

 

அகில இலங்கை வாலிப முன்னணியின் விசேட பொதுக்கூட்டம் 2026 நவம்பர் 3ஆம் திகதி அதன் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை வாலிப முன்னணி, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய மட்டத்தில் சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப புதிய திட்டங்களுடன் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

நாட்டில் தற்போது உருவாகி வரும் சூழ்நிலைகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. இச்சவால்களை எதிர்கொள்வதற்காக எமது இளைஞர்கள் தயார்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, ஐக்கியத்துடனும் ஒற்றுமையுடனும் செயற்படக்கூடிய இளைஞர் சமூகத்தை உருவாக்குவது இன்றைய காலத்தின் தேவையாகும்.

பெரும்பான்மைச் சமூகத்தினர் மத்தியில் நல்லெண்ணத்தை வளர்த்து, எமது சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அதற்காக நாட்டின் நாலாபுறங்களிலும் உள்ள இளைஞர்கள் தயார்படுத்தப்பட வேண்டும் என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் நிஹால் பாரூக் வேண்டுகோள் விடுத்தார்.

ஷாம் நவாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது பலரும் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

இக்கூட்டத்தில் ஷாம் நவாஸ், நிஹால் பாரூக், அஹமட் பர்ஹான், நலீர் அஹமட், இல்ஹாம் மரிக்கார், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம். அமீன் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி என். எம். ஷாஹித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகளைத் திட்டமிட்டு, அதன் சேவைகளை தேசிய மட்டத்தில் விரிவுபடுத்தும் நோக்கில் பல முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

முதற்கட்டமாக, கொழும்பு, களுத்துறை, காலி, புத்தளம், கேகாலை, அனுராதபுரம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

மேலும், ஏனைய மாவட்டங்களின் இணைப்பாளர்களுடன் இணையவழி ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் மாவட்ட மட்டச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து, அமைப்பின் சேவைகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

அமைப்பின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தை 2027 ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இலங்கையில் வாழும் மௌலவிகள், காதீப்மார்கள் உள்ளிட்ட சமயப் பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதற்காக முஸ்லிம் கலாசார அமைச்சு மற்றும் பைத்துல்மால் போன்ற அமைப்புகளுடன் கலந்துரையாடி, பொருத்தமான திட்டமொன்றை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுடன் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் நோக்கில், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்க்கும் நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் மகொன – இந்திரிலிகொட (INDIRILIGODA) புகையிரதக் கடவுப் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அகில இலங்கை வாலிப முன்னணியின் தலைவர் ஷாம் நவாஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டம், அமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகளைத் திட்டமிடுவதற்கும், சமூக சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading