அமெரிக்க கடற்படை அதிகாரிகளுக்கு ஈரான் மிரட்டல்
Iran Threatens US Navy Officers Over Minab Strike: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க கடற்படையின் இரண்டு உயரதிகாரிகளுக்கு எதிராக ஈரான் வெளிப்படையான மிரட்டல் விடுத்துள்ளது.
“உங்களை கண்டுபிடிப்போம்” என்று எச்சரிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவு சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது.

ஈரான் குற்றச்சாட்டின்படி, இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று ஈரானின் மினாப் (Minab) நகரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி மீது அமெரிக்கப் படைகள் Tomahawk ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் குறைந்தது 168 குழந்தைகள் உயிரிழந்தனர் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் எனக் கூறி, USS Spruance போர்க்கப்பலின் தளபதி Leigh R. Tate மற்றும் நிர்வாக அதிகாரி Jeffrey E. York ஆகிய இரு அமெரிக்க கடற்படை அதிகாரிகளின் பெயர்களை ஈரான் குறிப்பிட்டுள்ளது.
அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு, “We Will Find You” என்ற எச்சரிக்கை செய்தியையும் இணைத்துள்ளது. இந்த மிரட்டல் தகவல் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகத்தின் சமூக வலைதள கணக்கில் பகிரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னரும் மார்ச் மாதத்தில் இந்த இரு அதிகாரிகளையும் ஈரான் தனிப்பட்ட முறையில் குறிவைத்து குற்றம்சாட்டியிருந்தது. அப்போது மினாப் பள்ளி மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏவுகணை தாக்குதலுக்கு அவர்களே உத்தரவிட்டதாக ஈரான் கூறியிருந்தது.
இந்த விவகாரம் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வார்த்தைப் போர் மேலும் தீவிரமடையும் அபாயம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதுவரை இந்த மிரட்டல் குறித்து அமெரிக்க அரசாங்கம் அல்லது அமெரிக்க கடற்படை அதிகாரப்பூர்வமான பதில் எதையும் வெளியிடவில்லை. எனினும், சமூக ஊடகங்கள் வழியாக நேரடியாக வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

You must be logged in to post a comment.