World

கருணைக்கொலைக்கு விண்ணப்பிக்கப் போவதாக எச்சரிக்கும் பெண்

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் ‘எண்டோமெட்ரியோசிஸ்’ எனப்படும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ள 40 வயதுப் பெண் ஒருவர், அறுவை சிகிச்சைக்கான நீண்ட காத்திருப்பு மற்றும் தாங்க முடியாத வலியால், இன்னும் சில மாதங்களில் தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படாவிட்டால் மருத்துவ உதவியுடன் மரணிப்பதற்கு விண்ணப்பிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

மொன்றியலின் மேற்குத் தீவில் உள்ள சென்னெவில் பகுதியைச் சேர்ந்த சஹ்ரா நொரூசியார்டகி என்பவரே இவ்வாறு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

கிட்டத்தட்டத் தனது வாழ்நாள் முழுவதும் கடுமையான இடுப்பு வலி, அதிக இரத்தப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்சினைகளால் சஹ்ரா அவதிப்பட்டு வந்துள்ளார்.

கருணைக்கொலைக்கு விண்ணப்பிக்கப் போவதாக எச்சரிக்கும் பெண் | Ant To Die Quebec Woman Begs For Endometriosis

பல நிபுணர்களைச் சந்தித்தும், ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொண்டும் மருத்துவர்கள் அவரது வலியைச் சாதாரணமானது எனப் புறக்கணித்து வந்துள்ளனர்.

சுமார் பத்து ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின்னர், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகே அவருக்கு எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது வலி மேலும் தீவிரமடைந்துள்ளது.

பல் சுகாதார நிபுணராகப் பணியாற்றி வந்த அவர், தற்போது வேலையை இழந்து வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். இரவில் சுமார் மூன்று மணிநேரம் மட்டுமே உறங்கும் அவர், கைத்தடி மற்றும் முழங்கால் தாங்கியின் உதவியுடனேயே நடமாடுகிறார்.

வலியைக் குறைக்கத் தினமும் சுமார் நான்கு மணிநேரம் தரையில் படுத்து வயிற்றில் சுடுநீர் ஒத்தடம் கொடுத்து வருகிறார்.

கருப்பைக்கு வெளியே வளர்ந்துள்ள திசுக்களை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்காக சஹ்ரா காத்திருக்கிறார். கடந்த ஜூன் 23ஆம் திகதி அவரது அறுவை சிகிச்சை ‘P3’ முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது; அதன்படி 90 நாட்களுக்குள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 140 நாட்களுக்கும் மேலாகியும் அறுவை சிகிச்சை நடைபெறவில்லை.

வலி தாங்க முடியாமல் பலமுறை அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று மன்றாடியபோதும், “குடல் வெடிக்கவில்லை” அல்லது “உயிருக்கு ஆபத்தான அவசர நிலை இன்னும் ஏற்படவில்லை” எனக் கூறி மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மறுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெறாவிட்டால், மருத்துவ உதவியுடன் மரணிப்பதற்கு விண்ணப்பிப்பேன். நான் இறக்க விரும்புகிறேன்; இப்படியொரு வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. இது ஒரு வாழ்க்கையே அல்ல” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading