Cinema

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் இசையமைப்பாளாராக அறிமுகமாகிறார்!

ஹலிதா ஷமீம் இயக்கி வரும் ‘மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் இதனை ஹலிதா ஷமீம் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’, மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற ‘லோனர்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது ‘மின்மினி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்பதால், 2015-ஆம் ஆண்டு குழந்தைப்பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை படமாக்கிவிட்டார்.

இதையடுத்து அந்த கதாபாத்திரங்கள் இளம் பருவத்தை அடையும் வரை அதாவது 7 ஆண்டுகள் காத்திருந்து, அவர்களின் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு ‘மின்மினி’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஷங்கர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ’எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘புதிய மனிதா’ என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை கதீஜா பாடியிருந்தார். சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலையும் கதீஜா பாடியுள்ளார். இந்த சூழலில் ‘மின்மினி’ படத்துக்கு கதீஜா ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதை ஹலிதா ஷமீம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading