இன்று ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் இன்று (28) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நோர்வூட்டில் நடைபெறவுள்ளன.
இறுதிக்கிரியைகள் அரச அனுசரணையில் இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
பூதவுடல் நாளை (29) இறம்பொடையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, நாளை மறுதினம் (30) கொட்டகலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் அன்னாரின் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் நேற்று முன்தினம் (26) இரவு காலமானார்.
