இரண்டாக பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சியை ஒன்றிணைப்பதற்கான முயற்சி!

இரண்டாக பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சியை ஒன்றிணைப்பதற்கான முயற்சி திரைமறைவில் இடம்பெற்றுவருகின்றது. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.” – என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடாளுமன்றத்தைக் கூட்டினால் நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தாலேயே அதனை செய்வதற்கு அரசாங்கம் தயங்குவதாக முன்வைக்கப்படும் கருத்துகளை ஏற்கமுடியாது.
நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படாது என்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
எதிரணி வசம் பெரும்பான்மை இருந்தாலும் ஆட்சியை அவ்வளவு எளிதில் கவிழ்த்துவிடமுடியாது. ஏனெனில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். எனவே, ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அல்ல, வேறு நோக்கத்துக்காகவே நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்துகின்றனர்.
பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கால எல்லையும் முடிவடைந்துவிட்டது. ஐக்கிய தேசியக்கட்சி இரு அணிகளாகவே வேட்பு மனு தாக்கல் செய்தன. இந்நிலையில் இரு அணிகளையும் இணைத்து ஒரே அணியாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு திரைமறைவில் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
குறுகிய அரசியல் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்துகின்றனர். மாறாக மக்களின் நலனைக்கருத்திற்கொண்டு அல்ல. எனவே, இதற்கு அரசாங்கம் இடமளிக்காது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நாட்டில் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானவை. புதிதாக தேவையில்லை.” – என்றார்.
