இலங்கைப் படைப்பாளர்களுக்காக TikTok அறிமுகப்படுத்தும் ”Creator Search Insights’
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகப் படைப்பாளர்களுக்கு மிக முக்கிய சவாலாக இருப்பது, தங்களின் அடுத்த பதிவிற்கான சிறந்த யோசனையைக் கண்டறிவதாகும். மணிக்கணக்கில் பிறரது காணொளிகளைத் திரையில் பார்த்து நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பயனர்களின் தேடல் தேவைகளை நேரடியாகப் புரிந்து கொண்டு படைப்புகளை உருவாக்குவதே வெற்றிக்கான புதிய சூத்திரமாக மாறியுள்ளது.
இலங்கையில் உள்ள புதிய மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் உள்ளடக்கப் படைப்பாளர்களுக்கு (Content Creators) தொடர்ச்சியாகப் புதிய தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பது பெரும் சவாலாகவே விளங்கி வருகிறது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாகவும், படைப்பாளர்களின் படைப்பாற்றலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும் TikTok நிறுவனம் ‘கிரியேட்டர் சர்ச் இன்சைட்ஸ்’ (Creator Search Insights) எனும் புதிய செயல்திறன் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்கள் TikTok தளத்தில் எவற்றை அதிகமாகத் தேடுகிறார்கள் என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இந்த அம்சம் வழிவகுக்கிறது. வெறுமனே அனுமானங்களின் அடிப்படையில் காணொளிகளை உருவாக்காமல், தளத்தில் நிலவும் தேடல் தேவைகள், உள்ளடக்க இடைவெளிகள் மற்றும் பார்வையாளர்களின் ஆர்வங்கள் ஆகியவற்றைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள இது உதவுகிறது. நீங்கள் என்ன பகிர விரும்புகிறீர்கள் என்று யோசிப்பதை விட, மக்கள் எதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்று யோசிப்பதே தற்போதைய காலகட்டத்திற்குப் பொருத்தமான அணுகுமுறையாகும்.
இந்தச் சேவையின் மூலம் படைப்பாளர்களின் தனித்துவமான துறை சார்ந்த தேடல் போக்குகள் மற்றும் விருப்பப் பரிந்துரைகளை எளிதாகப் பெற முடியும். TikTok தளத்தில் ’Creator Search Insights’ எனத் தேடுவதன் மூலமோ அல்லது “TikTok Studio” மூலமோ இந்த வசதியை அணுகலாம். இதன் மூலம் கடந்த ஏழு நாட்களில் ஒரு குறிப்பிட்ட தலைப்பு எத்தகைய தேடல் வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பதையும், தேடல் தேவை அதிகமாக இருந்து அதற்கான காணொளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தலைப்புகளையும் கண்டறிந்து பயனடைய முடியும்.
குறிப்பாக, இலங்கையைச் சேர்ந்த படைப்பாளர்கள் நாட்டின் புவியியல் எல்லைக்கு உட்பட்ட தேடல்களை மட்டும் தனியாக வடிகட்டி ஆராய முடியும். இதன் மூலம் உள்ளூர் பார்வையாளர்களின் உண்மையான தேவைகளை அறிந்து, உணவு, ஆடை வடிவமைப்பு, சுற்றுலா, கல்வி, வணிகம், தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற பல்வேறு துறைகளில் தங்களின் பங்களிப்பைத் துல்லியமாக வழங்க முடியும்.
காணொளிகளைப் பதிவேற்றிய பின்னரும் கூட, அவற்றின் தேடல் செயல்திறனைத் பகுப்பாய்வு செய்து எதிர்கால யோசனைகளை மேம்படுத்தும் வசதியும் இதில் உள்ளது. மேலும், தலைப்புகள், ஹேஷ்டேக்குகள் (Hashtags) மற்றும் திரையில் தோன்றும் உரைகளில் சரியான முக்கிய வார்த்தைகளைப் (Keywords) பயன்படுத்துவது காணொளிகளின் சென்றடைதலை அதிகரிக்கும் என டிக்டாக் வழிகாட்டுகிறது.
தேடல் தரவுகள் பார்வையாளர்கள் எங்கே கவனத்தைச் செலுத்துகிறார்கள் என்பதை மட்டுமே காட்டும்; ஆனால், அவர்களைத் தொடர்ந்து ஈர்த்துவைப்பது படைப்பாளரின் தனித்துவமான வெளிப்பாடு, அனுபவம் மற்றும் கதைசொல்லும் பாணியே ஆகும். சரியான தரவுகளையும் உங்களின் சுய படைப்பாற்றலையும் இணைத்துச் செயல்படும்போது, மக்கள் தேடும் அடுத்த முன்னணி TikTok படைப்பாளராக நீங்கள் உருவெடுக்க முடியும்.



You must be logged in to post a comment.