2026 முதல் அரையாண்டில் ரூ. 7.2 பில்லியன் GWP வளர்ச்சியையும், 20.3% சந்தைப் பங்கையும் பதிவு செய்து Softlogic Life சாதனை
- 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சந்தைப் பங்கை3% ஆக உயர்த்தியுள்ளது
- உரிமை கோரிக்கைகள் மற்றும் அனுகூலங்களுக்காக ரூ. 10.4 பில்லியன் செலுத்தியுள்ளது
- மருத்துவ மற்றும் பாதுகாப்பு உரிமை கோரிக்கைகளுக்காக ரூ. 7.2 பில்லியன் செலுத்தி இலங்கையின் முதன்மை காப்புறுதி நிறுவனமாக திகழ்கிறது.
- 870,000 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள காப்புறுதிப் பத்திரங்கள் மூலம்8 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு பாதுகாப்பு அளித்து நாட்டின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது.
இலங்கையின் ஆயுள் காப்புறுதி துறையில் முன்னணி நிறுவனமான சாஃப்ட்லொஜிக் லைஃப் (Softlogic Life), 2026 ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (1HFY26) மிகச்சிறந்த நிதிச் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது. நாட்டின் ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் மிக அதிக அளவிலான மொத்த எழுதப்பட்ட கட்டுப்பண வளர்ச்சியைப் (GWP) பதிவு செய்துள்ள இந்நிறுவனம், கடந்த ஆண்டை விட ரூ. 7.2 பில்லியன் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் மூலம் 2025 ஆம் ஆண்டில் 18.4% ஆக இருந்த நிறுவனத்தின் சந்தைப் பங்கு, 2026 இரண்டாம் காலாண்டில் 20.3% ஆக உயர்ந்துள்ளது.
இக்காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணம் ரூ. 26 பில்லியனை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (ரூ. 18.7 பில்லியன்) ஒப்பிடுகையில் 39% வளர்ச்சியாகும். வரிகளுக்குப் பிந்தைய இலாபம் (PAT) 20% அதிகரித்து ரூ. 1.46 பில்லியனாகவும், வரிக்கு முந்தைய இலாபம் (PBT) 14% அதிகரித்து ரூ. 1.98 பில்லியனாகவும் பதிவாகியுள்ளது. 2025 டிசம்பர் 31 நிலவரப்படி, நிறுவனத்தின் பங்கு மூலதனத்தின் மீதான வருவாய் (ROE) 39% ஆகவும், மூலதனப் பேணல் விகிதம் (CAR) 245% ஆகவும் வலுவாக உள்ளது. இது ஒழுங்குமுறைத் தேவையான 120%-ஐ விட இரு மடங்குக்கும் அதிகமானதாகும்.
Softlogic Life நிறுவனத்தின் நிதி நிலைமை இக்காலப்பகுதியில் தொடர்ந்து வலுவாக இருந்ததுடன், 2026 ஜூன் 30 நிலவரப்படி மொத்த சொத்துக்கள் ரூ. 81.6 பில்லியனாக அதிகரித்துள்ளன. அதேவேளை, மொத்த பங்கு மூலதனம் ரூ. 14.6 பில்லியனை எட்டியுள்ளது. நிதி முதலீடுகள் ரூ. 61 பில்லியனாக பதிவாகியுள்ளதுடன், இது மொத்த சொத்துக்களில் 75% ஆகும். இதில் 74% அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய மருத்துவ மற்றும் பாதுகாப்பு உரிமைக் கோரிக்கைளை செலுத்தும் நிறுவனம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், Softlogic Life நிறுவனம் இந்த ஆண்டின் முதல் பாதியில் ரூ. 10.4 பில்லியனை உரிமைக் கோரிக்கைகள் மற்றும் அனுகூலங்களுக்காக வழங்கியுள்ளது. இதில் ரூ. 7.2 பில்லியனுக்கும் அதிகமான தொகை மருத்துவ மற்றும் பாதுகாப்பு உரிமைக் கோரிக்கைகளுக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. இது இலங்கை குடும்பங்களின் ஆரோக்கியம் மற்றும் நிதி நலனைப் பாதுகாப்பதில் Softlogic Life நிறுவனம் வகிக்கும் வளர்ந்து வரும் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேவைப்படும் சரியான தருணத்தில் அர்த்தமுள்ள நிதிப் பாதுகாப்பையும் நீண்டகால மன அமைதியையும் வழங்கி, இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே நிறுவனத்தின் முதன்மை நோக்கம் என்பதை இது பிரதிபலிக்கிறது.
இன்று, Softlogic Life நிறுவனம் 870,000 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள காப்புறுதிப் பத்திரங்கள் மூலம் 1.8 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. இது 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பதிவான 770,749 காப்புறுதிகளுடன் ஒப்பிடுகையில் தெளிவான வளர்ச்சியாவதுடன், வாடிக்கையாளர் சென்றடைவின் அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமாக Softlogic Life ஐ உயர்த்தியுள்ளது. விரிவடைந்து வரும் விநியோக வலையமைப்பு, வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் செயல்பாட்டுச் சிறப்பு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முதலீடுகளின் ஆதரவோடு, பாதுகாப்பு மற்றும் நீண்டகால சேமிப்புத் தீர்வுகளைக் கொண்ட சீரான முதலீட்டுத் தொகுப்பே நிறுவனத்தின் இந்த நிலையான வளர்ச்சிக்குத் தொடர்ந்து உந்துசக்தியாக அமைந்துள்ளது.
ஜூலையில் Allianz Life Insurance Lanka நிறுவனத்தைக் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, 2026 ஜூலையில் பங்காளதேஷின் Diamond Life Insurance நிறுவனத்தின் 60% பங்குகளை Softlogic Life நிறுவனம் கையகப்படுத்தியது. இது ஒரு இலங்கை ஆயுள் காப்புறுதி நிறுவனம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு கையகப்படுத்தல் என்பதுடன், பங்களாதேஷில் வெளிநாட்டு காப்புறுதி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட முதலாவது கையகப்படுத்தலுமாகும். திட்டமிட்ட செயல்பாடு, தயாரிப்புப் புத்தாக்கம் மற்றும் நீடித்த வாடிக்கையாளர் நம்பிக்கை மூலம் இலங்கையில் பெற்ற நிரூபிக்கப்பட்ட வெற்றியை ஒரு புதிய பிராந்திய சந்தையில் மீண்டும் தொடர Softlogic Life நிறுவனம் எதிர்பார்க்கும் நிலையில், இந்த பங்களாதேஷ் கையகப்படுத்தலானது நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி மூலோபாயத்தைக் குறிக்கிறது.
Softlogic Life நிறுவனத்தின் சாதனை குறித்து அதன் தலைவர் திரு. அசோக் பத்திரகே கருத்து தெரிவிக்கையில், “தொழில்துறையின் மிகப்பெரிய தனித்துவமான மொத்த எழுதப்பட்ட கட்டுப்பண வளர்ச்சியை வழங்குவதோடு, நாட்டின் மிகப்பெரிய மருத்துவ மற்றும் பாதுகாப்பு உரிமைக் கோரிக்கைகளைச் செலுத்தும் நிறுவனமாக விளங்குவது எமது மூலோபாயத்தின் வலிமையையும் செயல்பாட்டின் சீரான தன்மையையும் பிரதிபலிக்கிறது. நிலையான வளர்ச்சி, வலுவான நிதி அடித்தளம் மற்றும் எமது காப்புறுதிதாரர்கள், பங்குதாரர்கள் மற்றும் பங்குபற்றுநர்களுக்கு நீடித்த மதிப்பை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். தொழில்துறை வளர்ச்சியடைந்து வரும் வேளையில், புத்தாக்கம், ஒழுக்கம் மற்றும் அனைத்திற்கும் மேலாக வாடிக்கையாளர் நம்பிக்கையின் மூலம் எமது தலைமைத்துவத்தை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம்,” என அவர் தெரிவித்தார்.
இலங்கையின் காப்பீட்டுத் துறையானது கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் சந்தித்து வரும் ஒரு காலகட்டத்திலேயே இந்த முதலாவது அரையாண்டுச் செயல்திறன் வெளிவந்துள்ளது. முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உயர்ந்து வரும் மருத்துவச் செலவுகள் மற்றும் நீண்டகால நிதிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பு ஆகியவை முழுமையான பாதுகாப்புத் தீர்வுகளுக்கான தேவையை மேலும் அதிகரித்துள்ளன. இந்த பின்னணியில், காப்புறுதி துறையின் எதிர்காலம் என்பது வெறும் நிதிப் பாதுகாப்போடு நின்றுவிடாமல், ஆரோக்கியமான மற்றும் நிதி ரீதியாக மீண்டெழும் திறன் கொண்ட சமூகங்களை உருவாக்குவதிலும் தங்கியுள்ளது என்பதை உணர்ந்து, Softlogic Life நிறுவனம் தனது திறன்களை வலுப்படுத்துவதில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இதன் ஒரு அங்கமாகவே, Health for Life எனும் புதுமையான சுகாதாரக் காப்புறுதித் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இது காலாவதி திகதியோ அல்லது வயதுக் கட்டுப்பாடோ இல்லாத ஒரு பிரத்தியேக சுகாதாரக் காப்புறுதித் தீர்வாகும்.
இந்த நிலையில், Softlogic Life நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் இஃப்திகார் அஹமட் இது குறித்த கருத்து தெரிவிக்கையில், “எமது முதல் அரையாண்டு முடிவுகள், நம்பிக்கை, திட்டமிட்ட செயல்பாடு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒன்றாகும். Health for Life திட்டம் இலங்கை மக்களின் காப்புறுதி பாதுகாப்பை மறுவரைறை செய்துள்ளது. அதேவேளை, பங்காளதேஷிற்கான எமது விரிவாக்கம் ஒரு புதிய, உற்சாகமான எதிர்காலத்தைக் குறிக்கிறது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதிலும், இலங்கையில் தரமான காப்புறுதிச் சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதிலும், எமது சிறந்த சேவைகளையும், புத்தாக்கங்களையும் பிராந்தியம் முழுவதும் கொண்டு சேர்ப்பதிலும் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்,” என்றார்.
இந்த மூலோபாய வழிகாட்டலானது நிறுவனத்தின் சமீபத்திய ‘முதலீட்டாளர் மாநாடு 2026′ (Investor Forum 2026) இல் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதுடன், நிலையான, நீண்டகால வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்குப் பதிலளிக்கும் Softlogic Life நிறுவனத்தின் திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் வர்த்தக நாம வலிமை ஆகியவை தொடர்ந்து தொழில்துறை ரீதியான அங்கீகாரங்களைப் பெற்று வருகின்றன. அந்தவகையில், CA Sri Lanka வருடாந்த அறிக்கை விருதுகள்’ நிகழ்வில் பெருநிறுவன அறிக்கையிடலில் ஒட்டுமொத்த வெள்ளி விருதையும், காப்புறுதித் துறை அறிக்கையிடல் மற்றும் டிஜிட்டல் மாற்றியமைத்தல் அறிக்கையிடலில் தங்க விருதுகளையும், ஒருங்கிணைந்த அறிக்கையிடல் மற்றும் நிலையான வளர்ச்சி அறிக்கையிடலில் வெள்ளி விருதுகளையும் பெற்றுள்ளது. மேலும், ‘CMA ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகள்’ நிகழ்வில் காப்புறுதித் துறையின் ஒட்டுமொத்த தங்க விருது உட்பட 4 முக்கியப் பிரிவு விருதுகளைக் கைப்பற்றியுள்ளது. அதுமாத்திரமின்றி, SLIM Brand Excellence Awards 2025 நிகழ்வில் ஆண்டின் சிறந்த சேவை வர்த்தக நாமத்திற்கான தங்க விருதையும், ’29ஆவது சர்வதேச காப்புறுதித் துறை விருதுகள் 2025′ நிகழ்வில் (29th Insurance Industry Awards 2025) ‘ஆண்டின் சிறந்த செயற்கை நுண்ணறிவு (AI) முயற்சி’ விருதை வென்ற ஒரே இலங்கை நிறுவனம் என்ற பெருமையையும் Softlogic Life நிறுவனம் பெற்றுள்ளது.
புகைப்பட விளக்கங்கள்:
படம் 01: Softlogic Life தலைவர், அசோக் பத்திரகே
படம் 02: Softlogic Life முகாமைத்துவப் பணிப்பாளர், இஃப்திகார் அஹமட்
ஊடகத் தொடர்பு: Upeksha.Hettiarachchi@softlogiclife.lk

You must be logged in to post a comment.