இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மேம்பட்டு வருவதாக ஐ.நா.தகவல்!
இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவு திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் விவசாய அமைப்பு ஆகியன தெரிவித்துள்ளன.
இந்த விடயம் 2023 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டு பணி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், 3.9 மில்லியன் மக்கள் அல்லது மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் மிதமான கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.இது கடந்த ஆண்டு ஜூன் – ஜூலையில் இருந்ததைக் காட்டிலும் 40 சதவீதம் குறைந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடை காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவை உணவுப் பாதுகாப்பின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னேற்றங்கள் இருக்கின்றபோதும், சில மாவட்டங்களில் குறிப்பாக கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்றவற்றில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகமாகவே உள்ளது.
பெருந்தோட்டத்துறையின், சமூகங்களுக்குள்ளும், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் சமுர்த்தி போன்ற சமூக உதவித் திட்டங்களிலும் தங்கியுள்ள குடும்பங்கள் மத்தியிலும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மிக உயர்ந்த அளவில் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
இதேவேளை, 2022- 23இல் இரண்டு முக்கிய பயிர் பருவங்களில் அரிசி மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களின் உற்பத்தி 4.1 மில்லியன் தொன்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
