Jobs

இலங்கை பொலிஸாருக்கு 134 TATA Xenon Yodha கெப்களை வழங்குவதற்கு வசதியளித்த DIMO நிறுவனம்

 

இலங்கையில் TATA வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு விநியோகஸ்தரான DIMO நிறுவனம், வட மாகாணம் முழுவதிலும் செயற்பாட்டு ரீதியான போக்குவரத்து திறன் மற்றும் பொதுச் சேவைத் திறன்களை வலுப்படுத்தும் நோக்குடன், இலங்கை பொலிஸாருக்கு 134 TATA Xenon Yodha கெப் வாகனங்களை வழங்கும் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு, அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ கே.எம். ஆனந்த விஜேபால, பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ சுனில் வட்டகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன, பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா ஆகியோர் கலந்துகொண்டனர். டிமோ நிறுவனத்தின் சார்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே, நிறுவனத்தின் Automotive Engineering Solutions பிரிவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் கருணாரத்ன, TATA வணிக வாகன விற்பனைப் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் சம்பத் குமாரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் இந்திய TATA Motors நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சார்க் பிராந்திய முகாமையாளர் அபிஜீத் தாஸ் சர்மா, அந்நிறுவனத்தின் இலங்கை மற்றும் பூட்டானுக்கான நாட்டுக்கான பிரதானி அலீமுதீன் சயீத் மற்றும் சர்வதேச வணிக பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் ரஹிப் கான் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த வாகனங்கள், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் அதேவேளையில், நாட்டின் அரச சேவை செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாக, இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழங்கப்பட்ட 134 TATA Xenon Yodha கெப் வாகனங்களும் வட மாகாணம் முழுவதிலும் உள்ள இலங்கை பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் பொலிஸாரின் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தவும், தொலைதூரப் பகுதிகளுக்கான அணுகலை எளிதாக்கவும், அன்றாட பொலிஸ் கடமைகள், ரோந்துப் பணிகள் மற்றும் பிராந்தியத்திற்குள் அரச சேவை செயற்பாடுகளை சீராக முன்னெடுக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TATA Xenon Yodha வாகனங்கள் அவற்றின் நிரூபிக்கப்பட்ட நம்பகத்தன்மை மற்றும் கடினமான செயற்பாட்டுச் சூழல்களுக்குப் பொருத்தமான தன்மை ஆகியன காரணமாக இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளன. சக்திவாய்ந்த டீசல் எஞ்சின், அதிக-உறுதி கொண்ட சஸ்பென்ஷன், வீதிக்கும் வாகனத்திற்கும் இடையிலான அதிக இடைவெளி (Ground clearance), சிறந்த பாரம் சுமக்கும் திறன், நீண்ட காலம் நீடிக்கும் சட்டகம் (Chassis) ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த வாகனம், பல்வேறு நிலப்பரப்பு வகைகளில் திறம்பட செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விசாலமான உள்ளக இடைவெளி, பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் வடிவமைப்பு, எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த செயற்பாட்டுச் செலவு ஆகியன இதனை பொலிஸ் மற்றும் அரச சேவை செயற்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானதாக மாற்றுகின்றன. இலங்கை பொலிஸாரின் செயற்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நபர்களை திறம்பட ஏற்றிச் செல்வதற்கு வசதியாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மேற்கூரைகள் (Canopies) மற்றும் இருபுற நீளமான ஆசன வசதிகள் போன்ற மாற்றங்களுடன் இவ்வாகனங்கள் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில், “தேசிய சேவை செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கின்ற மற்றும் அரச துறையின் போக்குவரத்து திறனை வலுப்படுத்தும் ஒரு திட்டத்தில் பங்காளியாக இணைவதில் நாம் பெருமையடைகிறோம். இந்த வாகனத் தொகுதியினை வெற்றிகரமாக சேவையில் ஈடுபடுத்தியமையானது TATA வாகனங்கள் மீதான நம்பிக்கையையும், தேசிய முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் நம்பகமான நகர்வுத் தீர்வுகளை வழங்குவதற்கான DIMO நிறுவனத்தின் திறனையும் பிரதிபலிக்கிறது.” என்றார்.

பங்குதாரர்களின் ஒருங்கிணைப்பு, வாகன விநியோகம், விநியோக முகாமைத்துவம், தொழில்நுட்பத் தயாரிப்பு, தர உத்தரவாதம் மற்றும் பொருட்கள் கையாளுகை ஆதரவு ஆகியவற்றின் மூலம் இத்திட்டத்தை வெற்றிகரமாக நிர்வகித்து, வாகனத் தொகுதி சரியான நேரத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படுவதை DIMO நிறுவனம் உறுதி செய்துள்ளது.

DIMO நிறுவனத்தின் Automotive Engineering Solutions பிரிவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில்: “DIMO ஆகிய எமது பொறுப்பு ஆனது வாகனங்களை விநியோகம் செய்வதோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை மாறாக, விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு, தொழில்நுட்ப நிபுணத்துவம், அசல் உதிரிப்பாகங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் ஒரு விரிவான கட்டமைப்பின் மூலம் நீண்டகால நம்பகத்தன்மை மற்றும் செயற்பாட்டுத் தயார்நிலையை உறுதி செய்வதிலும் உள்ளது.” என்றார்.

வாகனத் துறையின் விசேடத்துவத்தில் 85 ஆண்டுகளுக்கும் மேலான பின்னணியைக் கொண்டுள்ள DIMO நிறுவனம், தொழில்நுட்ப நிபுணத்துவம், அசல் உதிரிப்பாகங்களின் கையிருப்பு, நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சிறந்த சேவை ஆகியவற்றின் மூலம் ஒருங்கிணைந்த போக்குவரத்துத் தீர்வுகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இந்த மைல்கல்லானது, நம்பகமான வாகனங்கள், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் விரிவான ஆதரவுக் கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாசைகளுக்கு புத்துயிரூட்டுவதில் DIMO நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading