ஈரான் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த திட்டம் ; உளவுத்துறை எச்சரிக்கை
வாஷிங்டனில் கொடூரமான கதிரியக்க வெடிகுண்டு தாக்குதலுக்கு ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளை குறிவைத்து மிகப்பெரிய கதிரியக்க அல்லது ரசாயன ஆயுதத் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாஷிங்டன் டி.சி.யில் தாக்குதல் நடத்த சாத்தியமான இடங்களைக் குறிப்பிட்டு, குறிவைக்கப்பட்டுள்ள அதிகாரிகளையும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், அமெரிக்காவுக்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொள்வதற்கான ஆட்களும் செயல்பாட்டுத் திறனும் ஈரானிடம் உள்ளதா என்பது குறித்து உளவுத்துறை அதிகாரிகள் மத்தியில் வேறுபட்ட கருத்து நிலவுவதாக தகவலை மேற்கோள்காட்டி சிஎன்என் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லாரன் பிஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “அனைத்து சாத்தியமான அச்சுறுத்தல்களையும் அமெரிக்கா கண்காணித்து வருகிறது. ஆனால் இந்த நேரத்தில் நம் நாட்டுக்கு நம்பகமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் முடங்கியுள்ள நிலையில், இந்த உளவுத்துறை தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில், ’மிக விரைவில்’ போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.