Technology

உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு என்ன?

உடல் பருமன் அதிகமுடையவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதற்கான காரணத்தை விளக்கும் ஆய்வை நிறைவு செய்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலில் உருவாகும் புற்றுநோய் திசுக்களை எதிர்த்து சண்டையிட்டு முறியடிக்கும் ஒருவித செல்கள், உடல் பருமன் அதிகமுள்ளவர்களின் உடல், கொழுப்புகளால் அடைக்கப்படுவதால், அவற்றின் செயல்பாடு நின்று புற்றுநோய் ஏற்படுவதாக அயர்லாந்தின் டிரினிட்டி கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரிட்டனில் புற்றுநோயை உண்டாக்கும், அதேவேளையில் தடுக்கும் வாய்ப்புள்ள புற்றுநோய்க்கான காரணிகளில் புகைப்பழக்கத்தை அடுத்து உடல்பருமன் இரண்டாவது இடத்தை வகிப்பதாக அந்நாட்டின் கேன்சர் ரிசர்ச் என்ற அமைப்பை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டனில் புற்றுநோய் தாக்கும் 20 பேரில் ஒருவர் அல்லது ஓராண்டுக்கு 22,800 பேருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக அதிகப்படியான உடல் பருமன் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலில் பெரும்பகுதியை கொழுப்பு அடைத்துகொண்ட பிறகு அது உடலிலுள்ள செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்பி, புற்றுநோயை உண்டாக்குவதாகவும், புற்றுநோய் அணுக்களை அதிகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் ஏற்கனவே சந்தேகித்திருந்தார்கள்.

இந்நிலையில், உடல்பருமன் அதிகமுள்ளவர்களின் கொழுப்பு எவ்வாறு புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டை பாதிக்கிறது என்பதை டிரினிட்டி கல்லூரி விஞ்ஞானிகள் ‘நேச்சர் இம்முனோலஜி’ என்ற சஞ்சிகையில் விளக்கியுள்ளனர்.

ஒவ்வொருவரின் உடலிலும் இயற்கையாக அமைந்துள்ள புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களை அதை பாதிக்கும் கொழுப்புகளிடமிருந்து காப்பாற்றி அவற்றை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் மருந்துகளை உருவாக்க முடியுமென்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

“இயற்கையான புற்றுநோய் எதிர்ப்பு அணுக்களை சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்கும் சேர்மத்தை பரிசோதித்து பார்த்தோம். நாங்கள் எண்ணியவாறே அதை முற்றிலும் அழிக்க முடிந்தது,” என்று பேராசிரியர் லிடியா லிஞ்ச் கூறுகிறார்.

“புற்றுநோய் அணுக்களை சூழ்ந்திருக்கும் கொழுப்பை நீக்குவதற்கு மருந்துகளை பயன்படுத்துவதைவிட உடல் எடையை குறைப்பது மற்ற பிரச்சனைகளில் சிக்காமல் இருப்பதற்கு உதவும் சிறந்த வழி,” என்று அவர் மேலும் கூறுகிறார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading