ஒப்பந்தத்தில் இருந்து பாபர் அசாம், றிஸ்வான் தரமிறக்கம்..!!
பாகிஸ்தான் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் மற்றும் மொஹமட் றிஸ்வான் ஆகியோரின் மத்திய ஒப்பந்தங்களை அந்நாட்டு கிரிக்கெட் சபை தரம் குறைத்துள்ளது.
அண்மைய தொடர்களில் பாகிஸ்தான் அணியின் படுமோசமான தோல்விகள் மற்றும் வீரர்களின் சுமாரான ஆட்டத்திற்குப் பின்னர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாபர் அசாம் மற்றும் மொஹமட் றிஸ்வான் ஆகியோர் 2025 ஆசிய கிண்ண தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 2025-26 பருவத்துக்காக புதிதாக அறிவித்துள்ள 30 வீரர்கள் கொண்ட மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவான உயரிய பிரிவில் இருந்த பாபர் அசாம் மற்றும் மொஹமட் றிஸ்வான் இருவரும், தற்போது பி பிரிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் அதிர்ச்சியூட்டும் விடயமாக, இந்த முறை ஏ பிரிவில் எந்த ஒரு வீரருக்கும் இடம் அளிக்கப்படவில்லை.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடத்தைப் பிடித்ததால், டெஸ்ட் அணித் தலைவர் ஷான் மசூத் பி பிரிவில் இருந்து டி பிரிவுக்கு தரம் குறைக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவும் பி பிரிவில் இருந்து சி பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

You must be logged in to post a comment.