Lead News

குருதி நாளங்கள் விரைவாக பலவீனமடைவது கண்டுபிடிப்பு!!!

கொவிட் தொற்று, அது இலேசானதாக இருந்தாலும், இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக பலவீனப்படுத்துகிறது என்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்தோடு இத்தொற்றின் விளைவான பாதிப்புக்கள் ஆண்களை விட பெண்களில் அதிகம் என்பதும் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

பிரான்சில் உள்ள பாரிஸ் நகர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரோசா மரியா புருனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழு நடத்திய ஆய்விலேயே இவ்விடயங்கள் தெரிய வந்துள்ளன. ​

2020 செப்டம்பர் முதல் 2022 பெப்ரவரி வரை 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,390 பேரிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜேர்னல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

“கொவிட் வைரஸ் நேரடியாக இரத்த நாளங்களைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது இரத்த நாளங்களை இயல்பை விட 5 வருடங்கள் வேகமாக பலவீனப்படுத்துகிறது. இதன் விளைவாக, இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது” என்றும் பேராசிரியர் ரோசா மரியா புருனோ தெரிவித்தார்.

கொவிட் தொற்று ஏற்படாதவர்களுடன் ஒப்பிடும்போது, கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பாக பெண்கள், மூச்சுத் திணறல், சோர்வு போன்ற நீண்டகால கொவிட் அறிகுறிகள் கொண்டவர்களுக்கும் இரத்த நாளங்கள், தமனிகள் (Arteries) இறுக்கமாக இருந்தன என்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், கொவிட் தடுப்பூசி போட்டவர்களுக்கு தமனிகள் அவ்வளவு வலுவாக இல்லை என்றும், அவர்களின் நிலை சற்று சிறப்பாக இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பெண்களில் அதிக விளைவுகள் ஏற்படக் காரணம் அவர்களது நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாகும் என்றும் பேராசிரியர் புருனோ நம்புகிறார்.

“பெண்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் வேகமாகவும் வலுவாகவும் செயல்படுகின்றன. இது அவர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் அதே வலுவான பதில் தொற்றுக்குப் பிறகு இரத்த நாளங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading