ஓவல் அலுவலகத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்தார் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகமான ஓவல் அலுவலகத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் நிறைவேற்று உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
எதிர்காலத்தில் பதவிக்கு வரும் ஜனாதிபதிகள் இந்த அலுவலகத்தின் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதையோ அல்லது அதனை அழிப்பதையோ தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ஓவல் அலுவலகத்தின் தோற்றத்தில் ட்ரம்ப் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளார். குறிப்பாக, தங்க நிற அலங்கார அம்சங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், ஓவல் அலுவலகம் தேசிய நினைவுச் சின்னமாக மாற்றப்படுவதாகவும், எதிர்காலத்தில் எவராலும் அதனை அழிக்கவோ அல்லது வேறு வடிவில் மீண்டும் அமைக்கவோ முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த உத்தரவு, வெள்ளை மாளிகையின் கிழக்குப் பிரிவான ஈஸ்ட் விங்கை முழுமையாக இடித்துத் தள்ளி, அந்த இடத்தில் புதிய நடன மண்டபம் ஒன்றை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வெளியாகியுள்ளது.
குறித்த கட்டுமானத் திட்டம் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளதுடன், அமெரிக்க காங்கிரஸின் அனுமதியும் பெறப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ட்ரம்ப் கையெழுத்திட்ட நிறைவேற்று உத்தரவின்படி, ஓவல் அலுவலகத்துடன் அதனைச் சூழவுள்ள சில அறைகளும் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, அலுவலகத்தின் வரலாற்றுக் கட்டமைப்பு அல்லது கட்டடக்கலைத் தன்மைக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அலங்காரங்களை மாற்றுதல், தளபாடங்களைத் தெரிவுசெய்தல் மற்றும் வழக்கமான நிர்வாக, பாதுகாப்பு மாற்றங்களைச் செய்தல் போன்ற ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது எனவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓவல் அலுவலகத்திற்கு வெளியே தங்க நிறத்திலான பெயர்ப் பலகை அமைத்தல், ரோஸ் கார்டனின் புல்வெளிப் பகுதியைத் தளமாக மாற்றுதல் மற்றும் புதிய ஹெலிகொப்டர் இறங்குதளம் அமைத்தல் உள்ளிட்ட மாற்றங்களும் அவரது பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஓவல் அலுவலகம் அமெரிக்காவின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்குவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அதனை எதிர்காலத்தில் எவராலும் அழிக்க முடியாத வகையில் பாதுகாப்பதே இந்த உத்தரவின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.