Local

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு! கொலையாளிகள் யாழில் சிக்கியது எப்படி?

 

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் , யாழ்ப்பாணத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (7) இரவு வீதியில் நடந்து சென்றவர் மீது , பின்னால் நடந்து வந்த நபர் ஒருவர் மிக அருகில் சென்று துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு , பின்னர் கார் ஒன்றில் ஏறி , துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விழுந்தவர் மீது காரினை ஏற்றி தப்பி சென்று இருந்தார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகி இருந்தன.

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னணியில் சந்தேக நபர்களான மூவர் இன்று (08) யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பகுதியில் இருவரும் தங்கியிருந்த வேளை, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், மானிப்பாய் பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

கொட்டாஞ்சேனைப் பகுதியைச் சேர்ந்த ஆண் இருவரும், பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலைய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை பொறுப்பெடுப்பதற்கு கொட்டாஞ்சேனை பொலிஸார் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களது கார் பஞ்சிகாவத்தை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டிருந்தது.

கொழும்பில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் , யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தப்பி செல்வது அதிகரித்துள்ள நிலையில் , யாழ்ப்பாண கரையோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்களை பாதுகாப்பு தரப்பினர் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading