Jobs

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு விரைவான நிதி ஆதரவிற்காக செலான் வங்கி, ‘3-நாள் கடன் தீர்வு’ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது  

 

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) விரைவாக நிதி ஆதரவைப் பெற உதவும் வகையில், செலான் வங்கி பிஎல்சி தனது புதிய 3-நாள் கடன் தீர்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், ரூ.25 மில்லியனுக்கும் குறைவான கடன்களுக்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், மூன்று வேலை நாட்களுக்குள் கடன் தீர்வுகள் வழங்கப்படும். SME துறையில் பொதுவாக எதிர்கொள்ளப்படும் முக்கிய சவால்களில் ஒன்றான, கடன் விண்ணப்பங்களின் முடிவைத் தீர்மானிக்க தேவைப்படும் நீண்ட காத்திருப்புக் காலத்தை சரிசெய்யும் வகையில் இம் முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

கடன் செயலாக்கத்தில் ஏற்படும் தாமதங்கள், குறிப்பாக அவசரமாக தொழிற்பாட்டு மூலதனம் தேவைப்படும்போது, ​​நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி வணிகத் திட்டமிடலைச் சீர்குலைக்கக்கூடும். வணிகங்கள் பெரும்பாலும் நிதி நிறுவனங்களிடமிருந்து பதிலைப் பெற பல வாரங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால், தொழிற்பாட்டுச் செலவுகளை நிர்வகிக்கவும் வாய்ப்புகள் உருவாகும்போது அதை பயன்படுத்தவும் இயலாமல் போகின்றது. இச் சவாலை கருத்தில் கொண்டு விரைவான மற்றும் தெளிவான முடிவை எடுப்பதை உறுதி செய்வதற்காகவே இப் புதிய திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த 3-நாள் கடன் தீர்வுத் திட்டம், ரூ.25 மில்லியனுக்கும் குறைவான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் திட்டங்களுக்குப் பொருந்தும். இதில் ‘அதஹித’, ‘தினன அய’ மற்றும் வங்கியின் சிறப்பு நடைமுறை மூலதனக் கடன் திட்டங்கள் போன்ற சேவைகள் உள்ளடங்கும். உள்ளக செயல்முறைகளை மேம்படுத்தியும் மதிப்பீட்டு நடைமுறைகளை வலுப்படுத்தியும், விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு ஆரம்பக் கடன் தகுதி முடிவு வழங்கப்படுவதை செலான் வங்கி உறுதி செய்கிறது.

 

மேலும், செலான் வங்கி,  இலங்கை அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) உடன் இணைந்து தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் லிமிடெட் (NCGIL) வழியாகவும் ஆதரவளிக்கின்றது. போதுமான பிணையம் இல்லாத சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி அணுகலை எளிதாக்கும் இந்த முயற்சியின் கீழ், ரூ.500,000 முதல் ரூ.25 மில்லியன் வரையான கடன்கள் வழங்கப்படுகின்றன. இதில் NCGIL, கடன் தொகையின் 67% வரை உத்தரவாதம் அளிப்பதால், வங்கிகள் சொத்து அடிப்படையிலான மதிப்பீட்டிலிருந்து விலகி, பணப்புழக்கம் மற்றும் வணிக நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு கடன் வழங்க முடிகிறது.

 

இதனுடன், பெண்கள் உரிமையிலான அல்லது பெண்களால் வழிநடத்தப்படும் MSMEகளை ஆதரிக்கும் ‘லிய சக்தி’ உத்தரவாதத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், 80% வரை உத்தரவாதப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. உற்பத்தி, சுற்றுலா, விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதி போன்ற முன்னுரிமைத் துறைகளில் உள்ள தொழில்முனைவோருக்கான நிதி அணுகலை விரிவுபடுத்துவதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதையும் இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையை வலுப்படுத்துவதையும் செலான் வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

தேசிய அளவில் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தும் முயற்சிகளுடன் இணைந்து செயல்படும் இந்த முன்முயற்சியை ஆதரிக்க, செலான் வங்கி நாடெங்கிலும் 171 கிளைகளை கொண்டுள்ளதுடன், திறமையான மற்றும் சிறப்புச் சேவைகளை வழங்கும் 13 பிரத்தியேக SME மையங்களையும் கொண்டுள்ளது. மேலும் கடன் பெறும் செயல்முறையை எளிதாக்குவதற்காக SME உறவு அலுவலர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகள், ஆவணங்கள் மற்றும் நிதித் திட்டமிடல் ஆகியவற்றிற்கு ஆதரவளித்து, அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உதவி வழங்குகிறார்கள்.

 

தீர்வு காலத்தை குறைப்பதன் மூலம், சிறு மற்றும் நடுத்தர வியாபார நிறுவனங்களுக்கு தங்களின் அவசர நிதித் தேவைகளை விரைவாக பூர்த்தி செய்து, வணிகத் தொடர்ச்சியைப் பேணவும், புதிய வளர்ச்சி வாய்ப்புகளை தாமதமின்றி பயன்படுத்திக்கொள்ளவும் செலான் வங்கி துணைபுரிகிறது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் SMEகள் முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்து, இந்த துறைக்கான தீர்வுகளை வங்கி தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading