Local

சிறைச்சாலையை பார்வையிட நான் யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை!

அரசியல் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தனக்கு பைத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் துப்பாக்கியுடன் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றமை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து முதல் முறையாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கருத்து வெளியிட்டுள்ளார்.

“வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றதனை ஏற்றுக்கொள்கின்றேன். எனினும் குடி போதையுடன் சென்று துப்பாக்கியை காட்டி சிறைக் கைதியை அச்சுறுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

நான் வெலிக்கடையில் உள்ள தூக்கு மேடையை பார்க்க சென்றேன். அமைச்சர் ஒருவருக்கு எந்த சந்தர்ப்பத்திலும் சிறைச்சாலையை பார்வையிடுவதற்கான உரிமையுள்ளது. அதற்கு யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. பகல் என்றாலும் இரவென்றால் எனக்கு சிறைச்சாலைக்கு செல்ல அனுமதி உண்டு.

எனக்கு கீழ் 29 சிறைச்சாலைகளும் இரண்டு புனர்வாழ்வு முகாம்களும் உள்ளன. உள்ளே என்ன நடக்கின்றதென பார்க்குமாறு எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நான் குடிபோதையில் இருக்கவில்லை. அத்துடன் நான் எந்த கைதிக்கும் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தவில்லை. அவ்வாறு செய்வதற்கு எனக்கு பைத்தியமில்லை.

நான் சிறைச்சாலைகளை பொறுப்பெடுக்கும் போது அவற்றிற்குள் பாரிய பிரச்சினைகள் காணப்பட்டன. நான் அவற்றினை நிறுத்தினேன். உள்ளே இடம்பெறும் போதை பொருள் வர்த்தகத்தை நிறுத்தினேன். பாரிய குற்றவாளிகளை வேறு இடத்திற்கு அனுப்பினேன். தொலைபேசி வர்த்தகங்களை நிறுத்தினேன். பாதுகாப்பு காரணங்கள் காரணமாக சில விடங்களை என்னால் கூற முடியாது.

கடந்த வார இறுதியில் அநுராதபுரம் சென்றேன். எனினும் சிறைக் கைதிகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் மேற்கொள்ளவில்லை. அவ்வாறு செய்வதற்கு எனக்கு பைத்தியமில்லை. கண்காணிப்பு மாத்திரமே மேற்கொண்டேன். நான் உள்ளே நடந்த குற்றங்களை தடுத்தமையினால் என் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது.

நான் பெண் ஒருவருடன் வெலிக்கடைக்கு சென்றதாக கூறப்படும் கதைகள் போலியானதாகும். இந்த அனைத்து விடயங்களையும் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெளிவுப்படுத்துவேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading