Jobs

செயற்கை நுண்ணறிவு வலுவூட்டப்பட்ட எரிசக்தி முகாமைத்துவத்தின் மூலம் தொழில்துறைகளுக்கான திறன்மிகு எரிசக்தியை SLIIT மேம்படுத்துகிறது

 

SLIIT ஆராய்ச்சியாளர்கள், உயிரி எரிபொருளால் இயங்கும் நீராவி விசையாழிகளில் மின்சார முன்னறிவிப்பை மேம்படுத்தும் ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த புத்தாக்கம், எரிசக்தி விரயத்தைக் குறைக்கவும், தொழிற்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும், நிலைபேற்றியல் கொண்ட எரிசக்தி முகாமைத்துவத்தை வலுப்படுத்தவும் தொழில்துறைகளுக்கு மிகவும் நடைமுறைக்கு ஏற்ற வழியை வழங்குகிறது. Top 2% Elsevier சஞ்சிகையான Energy Conversion and Management இல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, பாம் எண்ணெய் உற்பத்தியில் உயிரி எரிசக்திப் பயன்பாட்டில் கவனம் செலுத்துகிறது. இதில், விவசாய உப உற்பத்திகளை புதுப்பிக்கத்தக்க தொழில்துறை சக்தியாக மாற்ற முடியும்.

 

பாம் எண்ணெய் உற்பத்தியில், நார்கள், ஓடுகள் மற்றும் உமிகள் போன்ற உப உற்பத்திகள் நீராவி விசையாழிகளை இயக்க உயிரி எரிபொருளாகப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சரியான நேரத்தில் சரியான அளவு எரிசக்தியை உற்பத்தி செய்வதில் தொழிற்சாலைகள் பெரும்பாலும் சிரமத்தை எதிர்கொள்கின்றன. எரிசக்திக்கான தேவை அதிகமாக மதிப்பிடப்பட்டால், மதிப்புமிக்க உயிரி எரிபொருள் வீணாகலாம்; அது குறைவாக மதிப்பிடப்பட்டால், தொழிற்சாலைகள் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து அதிக மின்சாரத்தை உள்ளெடுக்க வேண்டியிருக்கும், இது தொழிற்பாட்டுச் செலவுகளை அதிகரித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டின் ஒட்டுமொத்த செயல்திறனைக் குறைக்கும்.

 

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆராய்ச்சிக் குழு, தொழில்துறை செயல்பாட்டு முறைகளிலிருந்து கற்றுக்கொண்டு, எதிர்கால எரிசக்தித் தேவையை மிகவும் துல்லியமாகக் கணிக்கக்கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்கணிப்பு அமைப்பை உருவாக்கியது. எட்டு ஆண்டுகால விரிவான தொழில்துறை தரவுத்தொகுப்பைப் பயன்படுத்தி, இந்த மாதிரி, ஒப்பீட்டு முறைகளை விட சுமார் 25% அதிக முன்கணிப்புத் துல்லியத்தை அடைந்ததுடன், உண்மையான செயல்பாட்டுச் சூழல்களில் வலுவான முன்கணிப்புச் செயல்திறனையும் வெளிப்படுத்தியது.

 

இந்த மேம்படுத்தப்பட்ட முன்கணிப்பு, தொழிற்சாலைகள் உயிரி எரிபொருள் பயன்பாட்டை முன்கூட்டியே திட்டமிடவும், நீராவி விசையாழியின் வெளியீட்டை உண்மையான தேவையுடன் மிகவும் நெருக்கமாகப் பொருத்தவும், கிடைக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் உதவும். அதிக எரிசக்தி தேவைப்படும் தொழில்களுக்கு, முன்கணிப்புத் துல்லியத்தில் ஏற்படும் சிறிய மேம்பாடுகள் கூட, திறமையான எரிபொருள் பயன்பாடு, சிறந்த செலவுக் கட்டுப்பாடு மற்றும் நம்பகமான உற்பத்தித் திட்டமிடல் ஆகியவற்றை ஆதரிக்க முடியும். இது தொழிற்சாலை செயற்பாட்டாளர்களுக்கு அன்றாட முடிவுகளுக்குத் தெளிவான தகவல்களை அளித்து, உற்பத்தித்திறனை நிலைபேற்றியல் இலக்குகளுடன் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.

 

SLIIT-இன் மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பட்டதாரியும், தற்போது அவுஸ்திரேலியாவின் La Trobe பல்கலைக்கழகத்தில் முழுமையான புலமைப்பரிசில் உதவியுடன் இலத்திரனியலில் முதுகலைப் பொறியியல் துறையில் கற்று வருபவருமான செல்வி ஹிமாயா பெரேரா இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கினார். இந்த ஆய்வு, SLIIT-இன் மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் கற்கைப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் எரங்க விஜேசிங்க மற்றும் SLIIT-இன் தகவல் தொழில்நுட்ப கற்கைப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் பாக்யா நத்தாலி சில்வா ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் குழுவில், SLIIT-இன் மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் பட்டதாரியும், தற்போது முழுமையான புலமைப்பரிசில் உதவியுடன் மின் பொறியியலில் கலாநிதி பட்டம் படித்து வருபவருமான திரு. ஷாலித ஜெயசேகர மற்றும் அவரது கலாநிதிப் பட்ட மேற்பார்வையாளரான தென்கொரியாவின் Kyungpook தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹொன்யோங் சா ஆகிய சர்வதேச ஒத்துழைப்பாளர்களும் அடங்குவர். இந்த ஒத்துழைப்பு, ஒரு நடைமுறைத் தொழில்துறை எரிசக்தி சவாலை எதிர்கொள்வதற்காகப் பொறியியல், கணினி மற்றும் சர்வதேச ஆராய்ச்சி நிபுணத்துவத்தை ஒன்றிணைப்பதோடு, பயன்பாட்டு எரிசக்திப் புத்தாக்கத்தில் இலங்கை ஆராய்ச்சியாளர்களின் வளர்ந்து வரும் பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

 

இந்த ஆய்வின் முக்கியத்துவம் ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலை அல்லது துறைக்கு அப்பாற்பட்டது. இலங்கை, தொழில்துறை எரிசக்தித் திறனை மேம்படுத்துவதற்கும், புதுப்பிக்கத்தக்க வளங்களின் உற்பத்திப் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கும் வழிகளை அதிகளவில் தேடி வருகிறது. விவசாயக் கழிவுகளை, மேலும் கணிக்கக்கூடிய மற்றும் திறமையாக நிர்வகிக்கப்படும் எரிசக்தி மூலமாக மாற்றுவதன் மூலம், இந்த ஆராய்ச்சி தொழில்துறை போட்டித்திறன் மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேற்றியல் ஆகிய இரண்டிற்கும் ஆதரவளிக்கிறது. மேலும் இது, எரிசக்தி, பாதுகாப்பு, உற்பத்தித் திறன் மற்றும் வள முகாமைத்துவம் ஆகியவற்றை நேரடியாகப் பாதிக்கும் துறைகளில் உள்ளூர் ஆராய்ச்சித் திறனை வலுப்படுத்த வேண்டிய பரந்த தேசியத் தேவையுடனும் ஒத்துப்போகிறது.

 

உண்மையான பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளுக்கு, ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்த தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வருவதையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. தொழில்துறைகள் மேம்பட்ட மற்றும் புத்திசாலித்தனமான செயல்பாடுகளை நோக்கி நகரும் நிலையில், SLIIT மற்றும் அதன் கூட்டாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் ஒரு முக்கிய விடயத்தை வெளிப்படுத்துகின்றன: அதாவது, பாரம்பரிய எரிபொருள் மூலமான உயிரிப்பொருளை, தொழில்துறை எரிசக்தியின் எதிர்காலத்திற்காகத் தரவு சார்ந்த மற்றும் திறன்மிக்க எரிசக்தி வளமாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவும் என்பதை இது காட்டுகிறது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading