Jobs

ஜப்பானைத் தொடர்ந்து இலங்கையிலும் தடம் பதிக்கும் BYD இன் ‘RACCO’ மின்சார வாகனம்

 

இலங்கையின் வளர்ந்து வரும் புதிய சக்தி வாகன சந்தையின் முதன்மை வர்த்தக நாமாகவும், உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராகவும் விளங்கும் BYD நிறுவனம், இலங்கையிலுள்ள அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஓட்டோ (John Keells CG Auto) நிறுவனத்துடன் இணைந்து ‘RACCO’ மின்சார வாகனத்தை இலங்கை சந்தையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானுக்கு வெளியே இந்த மாதிரி அறிமுகமாகும் முதலாவது நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வாகனத் துறையின் வரலாற்றிலேயே முதன்முறையாக, RACCO மின்சார வாகனம் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய மூன்று பிரதான நகரங்களிலும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாக அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டில் இதுவரை எந்தவொரு வாகன வர்த்தக நாமமும் மேற்கொள்ளாத ஒரு புதிய முயற்சியாக இது அமைந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். வாகனத்தின் அறிமுகத்தை ஏதேனுமொரு குறிப்பிட்ட நகரத்திற்கு மட்டும் வரையறுக்காமல், முதல் நாளில் இருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் RACCO-வை நேரடியாக அணுகக்கூடிய வசதியை உறுதி செய்வதற்கான BYD இன் அர்ப்பணிப்பையே இந்த மூன்று நகர அறிமுகம் வெளிப்படுத்துகிறது.

உலகின் மிகவும் போட்டித்தன்மை கொண்ட வாகனச் சந்தைகளில் ஒன்றான ஜப்பானில், பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் இட வசதியைத் திறம்படப் பயன்படுத்துவதற்கான ‘KEI car’ தரநிலைகளுக்கு ஏற்ப RACCO பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது. அங்கு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 1,500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாகி மாபெரும் சாதனை படைத்துள்ள நிலையிலேயே, RACCO தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளது. கச்சிதமான வெளிப்புறத் தோற்றம், விசாலமான உட்புற வடிவமைப்பு ஆகிய அம்சங்களின் ஒருங்கிணைப்பானது, இலங்கையின் வீதி நிலைகளுக்கும் நகரப் பயன்பாட்டிற்கும் உகந்த, நடைமுறைக்குச் சாத்தியமான மற்றும் உயர் தொழில்நுட்ப வாகனங்களை விரும்பும் இலங்கை ஓட்டுநர்களின் எதிர்பார்ப்புகளை வெகுவாகப் பூர்த்தி செய்யும் என BYD மற்றும் ஜோன் கீல்ஸ் சிஜி ஓட்டோ ஆகிய நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், அறிமுக நிகழ்வில் உரையாற்றிய ஜோன் கீல்ஸ் சிஜி ஓட்டோ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன தெரிவிக்கையில்: “RACCO இன் வருகை மூலம், இலங்கை வாடிக்கையாளர்களிடையே ஏற்கனவே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள ‘KEI car’ சந்தைப் பிரிவில் BYD காலடி எடுத்து வைக்கிறது. அடிப்படையில் RACCO ஒரு சிறந்த குடும்ப வாகனமாகும். கொள்முதல் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் குறைந்த செலவைக் கொண்டதுடன், ஒரு குடும்பத்தின் அன்றாடத் தேவைகள் மற்றும் சிறு வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய உயர் தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த பன்முகத்தன்மை காரணமாக, தனிநபர் மற்றும் வணிகத் தேவைகள் இரண்டையும் எம்மால் பூர்த்தி செய்ய முடிகிறது. மேலும், அதிகமான இலங்கை வாடிக்கையாளர்களுக்கு புதிய சக்தி சார்ந்த போக்குவரத்து தீர்வுகளை எளிதில் கிடைக்கப் பெறச் செய்வதை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்.” என்று குறிப்பிட்டார்.

தற்போது கொழும்பு, கண்டி, குருநாகல், காலி, அம்பாறை, இரத்தினபுரி, மொறட்டுவை, நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள BYD காட்சியறைகளில் RACCO விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் மூலம் ஜப்பானில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்ற அதே உயர்தர வாகனத்தை இலங்கை வாடிக்கையாளரும் நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கைச் சந்தையில் BYD இன் தொடர்ச்சியான முதலீட்டின் மற்றொரு முக்கிய மைல்கல்லாக இந்த அறிமுகம் அமைவதுடன், நாட்டை புதிய சக்தி சார்ந்த மின்சாரப் போக்குவரத்து யுகத்தை நோக்கி முன்நடத்திச் செல்வதில் BYD இன் முன்னிலை வகிக்கும் பங்களிப்பை இது மேலும் உறுதிப்படுத்துகின்றது.

 

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading