ஞாயிறு திருப்பலி ஆராதனைகள் இரத்து
நாட்டில் நாளை மறுதினம் ஞாயிற்றுகிழமை கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி ஆராதனைகளை நடத்த வேண்டாமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பேராயர் இல்லம் தெரிவிக்கிறது.
இலங்கையில் கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த சம்பவத்தை அடுத்து, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை கிறிஸ்தவ தேவாலயங்களில் திருப்பலி ஆராதனைகள் இரத்து செய்யப்பட்டன.
அன்றைய தினம் பேராயர் இல்லத்தில் மட்டும் சிறப்பு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன், அதனை நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தங்கள் வீட்டில் இருந்தவாறே தொலைக்காட்சிகளின் ஊடாக பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாட்டில் தொடர்ந்தும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பாதுகாப்பு பிரிவினர் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்ற பின்னணியில், அடுத்த வார ஞாயிறு திருப்பலி ஒப்புக் கொடுத்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
