Local

பிறந்த சிசுவை கொலை செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது!

பிறந்து மூன்று நாள்களேயான சிசுவின் சடலம், கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (05) பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியின் கிட்டங்கி ஆற்றில் இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

இது தொடர்பாக, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த சிசுவையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக கைதாகிய சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபருடன் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து வீசப்பட்ட சிசுவின் சடலத்தை மீட்டெடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான், உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன்,  பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து, அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசுவின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது.

நாளாந்த கூலி தொழிலாளியான சந்தேக நபர், இரண்டு திருமணம் செய்தவர் என்பதுடன், தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த  2 பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading