Local

பொய் சொல்வதில் அநுர அரசு கின்னஸ் சாதனை! சஜித் கிண்டல்!!

பொய் சொல்வதில் NPP கின்னஸ் சாதனை: கோதுமை மா விலையும் கூடிவிட்டது

அரசாங்கம் மக்களுக்குச் சிறந்த சேவையை ஆற்றி வருகிறது என்றால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமகாராம விஜிதபுர பகுதியில் இன்று சனிக்கிழமை விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

தேர்தலை எதிர்கொள்ள அச்சம்

“மாகாண சபைத் தேர்தலின் மூலமே அரசாங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் உண்மையான செல்வாக்கை அறிந்துகொள்ள முடியும். விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் என அனைவரும் மாகாண சபைத் தேர்தல் வரும் வரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நாட்டின் புதிய பயணத்திற்கான திருப்புமுனை ஐக்கிய மக்கள் சக்தி மூலமாகவே உருவாக்கப்படும்.

நாட்டில் எண்ணற்ற பிரச்சினைகள் காணப்படுகின்ற போதிலும், அரசாங்கம் கனம்பொருந்திய நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்துகிறது. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில்கள் இல்லை. இந்நாட்டின் ஜனநாயகத்தையும் நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும் சீரழிக்கும் வேலையையே இந்த அரசாங்கம் செய்து வருகின்றது.

பொய் சொல்வதில் கின்னஸ் சாதனை

இந்த அரசாங்கம் விருது பெற்ற பொய்யாளர்களாக மாறியுள்ளது. அரசாங்கத்தின் இந்த பொய் சொல்லல் மற்றும் ஏமாற்றுதல்கள் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற வேண்டும். அந்த அளவிற்குப் பொய்யான தகவல்களையே அரசாங்கம் பேசி வருகின்றது. முறைமையில் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் வாக்களித்தாலும், உண்மையை விட பொய்யே வெற்றி பெற்றுள்ளது.

தற்போது கோதுமை மா ஒரு கிலோகிராம் 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் உயர்ந்து, மக்களின் உணவுக் பழக்கவழக்கங்களில் பாரிய தாக்கம் ஏற்படும். சர்வதேச நிறுவனம் ஒன்று குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக 130 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்திய கணக்கெடுப்பில் இலங்கை 120 ஆவது இடத்தில் உள்ளது.

நமக்கு முன்னால் பாகிஸ்தான், நேபாளம், வங்களாதேசம் ஆகிய நாடுகள் இருக்கின்றன. தெற்காசிய நாடுகளிலேயே இலங்கை மிகவும் பின்னடைவில் உள்ளது. ” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading