பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் பயனுள்ளதா..!!
17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்து அரசு தீவிரமான இராணுவச் மோதல்களில் சிக்கியிருந்தது, குறிப்பாக பிரான்சுடன் (King William’s War). அரசர்களிடம் போரைத் தொடரத் தேவையான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் இல்லை. வரி வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கவில்லை.
வழக்கமான வர்த்தக முறைகளைக் கொண்டு இவ்வளவு பெரிய போரைக் கட்டியெழுப்ப முடியாது என்ற இக்கட்டான சூழ்நிலையில், அரசு முற்றிலும் திணறியது.
அப்போதுதான் அரசாங்கம் கடனில் மூழ்கியிருந்தாலும், அந்த நெருக்கடியை ஒரு புதிய வாய்ப்பாக மாற்றும் தந்திரமான யோசனை முன்வைக்கப்பட்டது.
1694-ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த வணிகரும் தொலைநோக்கு சிந்தனையாளருமான William Paterson மற்றும் அவரது முதலீட்டாளர்கள் குழு அரசிற்காக ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்தது:
முதலீட்டாளர்கள் குழு ஒன்று இங்கிலாந்து அரசிற்கு £1.2 மில்லியன் பவுண்டுகளை கடனாக வழங்கியது.
இந்தத் தொகை சாதாரணக் கடன் அல்ல; இதற்கு ஈடாக அரசாங்கம் எதிர்கால வரி வருவாயைக் கொண்டு வட்டி மற்றும் அசலைத் திருப்பித் தருவதாக உறுதியளித்தது.
இந்த நிதி ஏற்பாட்டை நிர்வகிக்கவும், அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கவும் அதிகாரப்பூர்வமாக Bank of England என்ற தனியார் கூட்டுப்பங்கு வங்கி உருவாக்கப்பட்டது.
இங்குதான் மனித வரலாற்றை மாற்றியமைத்த மிகப்பெரிய நிதி மோசடி போன்ற ஒரு தந்திரம் அரங்கேறியது. Bank of England ன் உருவாக்கம் தான் அது.
Bank of England உருவாக்கிய முறை உலகளாவிய நிதி அமைப்பின் DNA வாக மாறியது:
அரசாங்கம் வங்கியிடம் 1.2 மில்லியன் கடன் வாங்கியது அல்லவா.. ஆகவே வங்கி தன்வசமிருந்த தங்கத்தை மட்டும் நம்பியிருக்காமல், அரசாங்கம் தனக்குத் தர வேண்டிய கடனை (IOU – I Owe You) ஆதாரமாகக் கொண்டு காகித நோட்டுகளை அச்சிட்டு வெளியிட்டது.
அதாவது, ஒரு அரசாங்கம் தனக்குள்ள கடனை அடிப்படையாகக் கொண்டே புதிய பணத்தை (Fiat Money) உருவாக்கியது.
இந்த முறைக்கு முன்பு வரை, தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களின் எடைக்கு ஈடாக மட்டுமே பணம் புழக்கத்தில் இருந்தது. ஆனால் இந்த முறையால் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் மாறிப்போனது:
காகிதத் தாள்களுக்குப் பின்னால் உடனுக்குடன் கொடுக்கத் தங்கம் கிடையாது; அரசாங்கம் எதிர்காலத்தில் கடனைத் திருப்பித் தரும் என்ற நம்பிக்கை (Trust & Faith) மட்டுமே உத்தரவாதமாக இருந்தது.
வங்கிகள் தங்களிடம் உள்ள உண்மையான இருப்பை விட பல மடங்கு அதிகமான பணத்தைக் கடனாக வழங்கத் தொடங்கின. இதுவே நவீன Fractional reserve banking முறையின் தொடக்கமாகும்.
மக்கள் அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக அந்தக் காகிதத் தாள்களைத் தங்கம் போலவே மதிப்புமிக்கதாக ஏற்றுக்கொண்டனர்.
இந்தத் தற்செயலான மற்றும் அவசரத் தேவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘நம்பிக்கை சார்ந்த நிதி அமைப்பு’தான், இன்று உலகின் அனைத்து மத்திய வங்கிகளுக்கும் (Federal Reserve, European Central Bank போன்றவை) அடிப்படை அத்திவாரமாக திகழ்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பு பிரிட்டனின் அதிர்ஷ்டத்தை மாற்றி எழுதியது.
காகிதப் பணம் அறிமுகமானவுடன் வர்த்தகம் எளிதானது; மலைபோல் தங்கம் சுமந்து செல்ல வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டது.
கடனைத் துணையாகக் கொண்டு போர்களைச் சந்தித்த பிரிட்டன், ஒரு வெறும் இராணுவப் பேரரசாக மட்டுமல்லாமல், சர்வதேச நிதிப் பேரரசாக (Financial Empire) உருவெடுத்தது.
Pound Sterling உலகின் முதன்முறையான வலிமையான Reserve நாணயமாக மாறியது. லண்டன் உலக நிதி மையத்தின் இதயத்துடிப்பாகத் திகழ்ந்தது.
காலனித்துவ நாடுகளை நேரடியாகப் படைகளைக் கொண்டு தாக்க வேண்டிய அவசியமில்லை; அவர்களுக்குக் கடன் கொடுத்து அவர்களின் எதிர்காலத்தையே பிரிட்டன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.
1720-ன் South Sea Bubble போன்ற நிதி நெருக்கடிகள் வந்தபோதிலும், Bank of England தலையிட்டு அவற்றைத் தாங்கிப் பிடித்தது. உலகின் நாடுகள் அனைத்தும் இவர்களின் வங்கி முறையைப் பின்பற்றத் தொடங்கின.
ஆனால், எந்தப் பேரரசும் என்றென்றும் நிலைத்திருக்க முடியாது.
1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது, பிரிட்டன் வெற்றி பெற்ற நாடுகளின் வரிசையில் நின்றது உண்மைதான்; ஆனால் நிதி ரீதியாகத் bankruptcy ஆகிவிட்டது.
தொழிற்சாலைகள் சிதைந்தன; நகரங்களை மீண்டும் கட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அச்சமயம் உலகப்போரால் பெருமளவு இலாபமடைந்த அமெரிக்காவிடம் பெருமளவிலான கடன்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது பிரிட்டன்.
1944-ன் Bretton Woods மாநாட்டில் உலக நாணய முறையின் மையம் அமெரிக்க டாலருக்கு மாறியது. உலக வர்த்தகத்தில் பவுண்டின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட காலனி நாடுகள் சுதந்திரம் பெற்றன. 1956-ன் சூயஸ் கால்வாய் நெருக்கடி (Suez Crisis), பிரிட்டனால் அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமல் இனி தனித்து எதையும் சாதிக்க முடியாது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. பிரிட்டனின் இராணுவ மற்றும் ஏகாதிபத்திய பலம் முடிவுக்கு வந்தது.
பிரிட்டனின் சொந்த நாணயமான பவுண்ட் பலவீனமடைந்தாலும், City of London நகரின் நிதி நிபுணத்துவம் அழியவில்லை.
வங்கிகள் ஒரு புதிய மற்றும் புத்திசாலித்தனமான வழியைக் கண்டறிந்தன.
அமெரிக்காவில் இல்லாத, ஆனால் அமெரிக்க டாலர்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளை லண்டன் தன் மண்ணில் அனுமதிக்கத் தொடங்கியது.அதை Eurodollar என அழைக்கப்பட்டது.
பிரிட்டன் சொந்தமாக அச்சிடாத, கட்டுப்படுத்தாத அமெரிக்க டாலர்களை வைத்து லண்டன் வங்கிகள் கடன் வழங்கவும், deposit களை பெறவும் ஒரு பிரம்மாண்டமான சர்வதேசச் சந்தையை உருவாக்கின.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் வங்கிகளும் லண்டனைத் தங்கள் நிதியியல் சந்திப்பு முனையமாக ( financial hub) மாற்றின.
பழைய பேரரசு தனது கொடிகளை இறக்கியது; ஆனால் லண்டன் நகரின் நிதி வலையமைப்போ எல்லைகளைக் கடந்து உலகப் பணத்தைக் கையாள்வதில் தவிர்க்க முடியாத சக்தியாக விஸ்வரூபமெடுத்தது.
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திவாலாகி நின்ற ஒரு மன்னனின் போர்த் தேவைகளுக்காக William Paterson முன்வைத்த அந்தத் தந்திரமான யோசனை, வெறும் ஒரு தற்காலிகத் தீர்வு என்றுதான் அப்போது கருதப்பட்டது.
ஆனால், தற்போதைய நவீன உலகளாவிய நிதிமுறைகளைக் கவனித்தால், மண்ணுக்குள் உறங்கும் வில்லியம் பேட்டர்சன் தனது கல்லறைக்குள் படுத்தபடி உரக்கச் சிரித்துக் கொண்டிருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!
இன்றைய உலகப் பொருளாதாரத்தின் பிரம்மாண்டத்தைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள்:
உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் (Central Banks) தேவைப்படும்போதெல்லாம் கணினித் திரைகளில் எண்களைத் (Quantitative Easing)தட்டிப் பணத்தை உருவாக்குகின்றன.
அரசாங்கங்கள் வாங்கும் கடன்கள்தான் இன்று நாட்டின் பணப் புழக்கமாக மாற்றப்படுகின்றன.
நமது கைகளில் இருக்கும் காகித நோட்டுகளுக்கு (Paper currency) சொந்தமாக எந்தவொரு உள்ளார்ந்த மதிப்பும் (Intrinsic value) கிடையாது. அது வெறும் சாதாரண காகிதம்தான். அதேபோல், நமது வங்கிச் செயலிகளில் (Banking App) காட்டும் எண்கள் வெறும் கணினித் திரையில் ஒளிரும் டிஜிட்டல் குறியீடுகள் மட்டுமே.
அதற்குப் பின்னால் அவற்றைக் கொடுத்துப் பெறத்தக்க தங்கம் அல்லது வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் எதையும் அரசாங்கம் நமது கணக்கிற்காக பத்திரமாக வைக்கவில்லை.
பண்டைய காலத்தில் ஒரு பொருள் அல்லது நாணயத்தின் மதிப்பு அது செய்யப்பட்ட தங்கத்தின் அளவை வைத்தே தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், இன்றைய நவீன உலகில் காகிதப் பணத்திற்கும் டிஜிட்டல் பணத்திற்கும் மதிப்பு எதிலிருந்து வருகிறது என்றால், அது “இது பணம் தான், இதன் மூலம் பொருள்களை வாங்க முடியும்” என்று ஒட்டுமொத்த மக்களும் அரசாங்கத்தின் மீதும் அதன் பொருளாதார அமைப்பின் மீதும் வைத்துள்ள அசைக்க முடியாத கூட்டு நம்பிக்கையிலிருந்து (Collective Trust) மட்டுமே பிறக்கிறது.
இந்த மாயையின் சுவாரஸ்யம் என்னவென்றால், மக்கள் அனைவரும் அதை ‘பணம்’ என்று நம்பும் வரை அந்த அமைப்பு மிகச் சிறப்பாக இயங்கும்.
ஆனால், ஒரு நாட்டின் அரசாங்கத்தின் மீதோ அல்லது அதன் பொருளாதாரத்தின் மீதோ மக்களுக்கு இருக்கும் அந்த ‘நம்பிக்கை’ எப்போதாவது உடைந்துபோனால் (கடுமையான பணவீக்கம் அல்லது பொருளாதாரச் சரிவு), அந்தப் பணம் வெறும் காகிதக் குப்பையாகவோ அல்லது அர்த்தமற்ற எண்களாகவோ மாறிவிடும்.
சுருக்கமாகச் சொன்னால், இன்றைய உலகப் பொருளாதாரம் என்பது தங்கம் போன்ற திடப்பொருட்களால் அல்ல, மாறாக மனிதர்களின் ‘நம்பிக்கை’ என்ற கண்ணுக்குத் தெரியாத நூலால் மட்டுமே பிணைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான மாயையாகும்.
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு லண்டனில் ஒரு தேசத்தின் நெருக்கடியைச் சமாளிக்க உருவாக்கப்பட்ட அந்தப் பொருளாதார ‘மாயை’, இன்று ஒட்டுமொத்த உலகத்தையும் இயக்கும் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் William Peterson அன்று தான் சொன்ன அந்த வரலாற்று வாக்கியத்தை நினைத்து நிச்சயமாகப் புன்னகைத்துக் கொண்டிருப்பார்:
“The bank hath benefit of interest on all the money which it creates out of nothing.”
நவீன உலகப் பொருளாதாரம் என்பது இரும்பால் கட்டப்பட்ட ஒரு கோட்டை அல்ல; மாறாக, கண்ணுக்குத் தெரியாத பல நூல்களால் மிக நுணுக்கமாகப் பின்னப்பட்ட ஒரு பிரம்மாண்டமான சிலந்தி வலை போன்றது.
இந்த நிதி அமைப்பில் உலகின் ஒரு மூலையில் நடக்கும் மிகச் சிறிய பொருளாதாரப் பிளவு கூட, அதிவேகமாகப் பரவி ஒட்டுமொத்த உலகத்தையும் நிலைகுலையச் செய்யும் வல்லமை கொண்டது.
இதைத்தான் நாம் பொருளாதாரத்தில் ‘Domino Effect’ அல்லது சங்கிலித் தொடர் வீழ்ச்சி என்கிறோம்.
நவீன நிதி அமைப்பு முழுவதும் ‘நம்பிக்கை’ என்ற ஒற்றைக் தூணின் மீதுதான் தாங்கி நிற்கிறது. ஒரு குறிப்பிட்ட துறையில் (உதாரணமாக, Mortgage market அல்லது வங்கித்துறையில்) சிறிய அளவில் நம்பிக்கை தளரும்போது, அது உடனடியாக Panic ஆக மாறுகிறது. மக்கள் தாங்கள் சேமித்த பணத்தை உடனடியாகத் திரும்பப் பெற வங்கிகளை நோக்கி ஓடுவார்கள்.
நாம் முன்பே பார்த்தது போல, வங்கிகள் தங்களிடம் உள்ள சொற்ப பணத்தை வைத்துக்கொண்டு, மீதமுள்ள ஒட்டுமொத்தக் கடன்களையும் ‘Fractional Reserve Banking’ முறை மூலமே இயக்குகின்றன. எனவே, திடீரென்று அனைவரும் பணத்தைக் கேட்டால் வங்கிகளிடம் பணம் இருக்காது.
இது ஒரு வங்கி திவாலாகும் போது, அது மற்ற வங்கிகளுடனான அதன் கொடுக்கல் வாங்கல்களையும் துண்டித்துவிடுகிறது.
வங்கிகள் கடன் வழங்குவதை நிறுத்தும்போது, தொழிலதிபர்களுக்கு மூலதனம் கிடைப்பதில்லை. இதனால் தொழிற்சாலைகள் உற்பத்தியைக் குறைக்கின்றன அல்லது மூடுகின்றன. வேலையின்மை அதிகரிக்கிறது; மக்களின் வாங்கும் திறன் (Purchasing Power) அதலபாதாளத்திற்குச் செல்கிறது. வாங்கும் திறன் குறைந்தவுடன், சந்தையில் பொருட்கள் விற்பனை செய்ய முடியாமல் வணிகங்கள் முடங்குகின்றன.
இறுதியில், இந்தச் சுழற்சி மீண்டும் மந்தநிலையாக மாறி ஒட்டுமொத்த தேசத்தையும் முடக்கிப்போடுகிறது.
முடிவாக, பதினேழாம் நூற்றாண்டில் William Peterson விதைத்த அந்த ‘வெறுமையிலிருந்து பணம் உருவாக்கும்’ மாயவித்தை, நமக்கு எண்ணற்ற வசதிகளையும் நவீன பொருளாதார வளர்ச்சியையும் தந்தது உண்மைதான்.
ஆனால், அதே வேளையில் அது ஒவ்வொரு முறையும் ஒரு சிறு தவறுக்கோ அல்லது நம்பிக்கை இழப்புக்கோ ஒட்டுமொத்த உலகத்தையும் பலிகடாவாக்கும் அபாயத்தையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது.
ஒரு சிறிய தீப்பொறி மொத்தக் காட்டையும் எரித்துத் சாம்பலாக்குவது போல, பொருளாதாரத்தின் ஒரு மூலையில் எழும் சிறு வீழ்ச்சி, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலையச் செய்யக் காலம் எடுப்பதில்லை என்பதற்கு விரைவில் வரப்போகும் ********** சாட்சியாகும்!
“Those who create and issue money and credit direct the policies of government and hold in the hollow of their hands the destiny of the people.”- Rt. Hon. (Robert H. Hemphill
(பணத்தையும் கடனையும் உருவாக்கி வெளியிடுபவர்களே அரசாங்கத்தின் கொள்கைகளை வழிநடத்துகிறார்கள்; மேலும் மக்களின் விதியைத் தங்களின் உள்ளங்கைக்குள் வைத்திருக்கிறார்கள்.”)

You must be logged in to post a comment.