Lead NewsLocal

மஹிந்தவுக்கு புதன்கிழமை மீண்டும் சபையில் ‘வேட்டு!’ – நிறைவேறவுள்ளது ‘பிரதமர் பதவி பறிப்பு’ப் பிரேரணை; தீனிபோட்ட மைத்திரியாலேயே தூக்கி வீசப்படவுள்ளார்

ஆறு வாரகாலம் இலங்கையின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன்கிழமை, பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுடன், நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதி நடத்திய பேச்சுக்களின்போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மைப் பலம் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டிருந்தார்.

அத்துடன், புதிய பிரதமரை நியமிக்குமாறு, எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறும் அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையில், எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது, புதிய பிரதமரை நியமிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இதையடுத்து, இந்தத் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். அவர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து கலந்துரையாடுவார்.

இதன் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்யும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்வதை விட வேறு வழியில்லை என்ற நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பதில் இழுபறி காணப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில், ஜனாதிபதி உறுதியாக இருக்கின்ற நிலையில், அவரையே பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக, ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஜனாதிபதி இன்று மீண்டும் பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading