மஹிந்த குடும்பத்தை வழக்குகளிலிருந்து விடுவிக்கவே சூழ்ச்சி மூலம் புதிய அரசு! – சபையில் அநுரகுமார காட்டம்
”மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றில் உள்ள வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவே புதிய அரசு உருவாக்கப்பட்டது” – என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை மறைத்துக்கொள்ளவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தமுறை ஜனாதிபதியாகத் தெரிவாக வேண்டுமென்ற பதவி ஆசையின் காரணமாகவுமே அரசியல் சூழ்ச்சியால் புதிய அரசை அமைத்துள்ளனர்.
அடுத்தமாதம் கோட்டாபய ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரின் வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன. இதிலிருந்து விடுபட்டுக்கொள்ளும் முகமாகவும் அடுத்தமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் மைத்திரி – மஹிந்த இணைந்து ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடே புதிய அரசு.
இதேவேளை நாட்டை பாதுகாப்பும் பொறுப்பு இராணுவத்துக்கும், பொலிஸாருக்கும் உள்ளது. அரசமைப்பை பாதுகாக்குமாறு இவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்” – என்றார்.

