Local

ரணில் அணியுடனான சந்திப்பை இரத்துச் செய்துவிட்டு மஹிந்த குழுவுடன் இரவிரவாக மைத்திரி ஆலோசனை!

தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென இறுதி நேரத்தில் இரத்துச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் நடத்திய பேச்சுக்களில் முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில், நேற்றிரவு 8 மணிக்கு மீண்டும் சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டது.

இதற்கமைய நேற்றிரவு ஐ.தே.மு. தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கத் தயாராகியிருந்த நிலையில், திடீரென ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.

தவிர்க்க முடியாத காரணங்களால் ஜனாதிபதியைச் சந்திக்க முடியவில்லை என்றும், இன்று திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு இந்தச் சந்திப்பு நடக்கும் என்றும் ஜனாதிபதி செயலத்தில் இருந்து, ஐ.தே.மு. தரப்புக்கு தகவல் அனுப்பப்பட்டது. இது ஐ.தே.மு. வட்டாரங்களில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, ஐ.தே.மு. தலைவர்களுடனான சந்திப்பை இரத்துச் செய்த ஜனாதிபதி மைத்திரி, அதன் பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.

திலங்க சுமதிபால, சுசில் பிரேம ஜயந்த, வாசுதேவ நாணயக்கார,உதய கம்மன்பில ஆகியோருடன் பஸில் ராஜபக்ஷவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

நேற்றிரவு நீண்ட நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், இதன் பேசப்பட்ட விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading