வெயிலில் குளிர்ச்சியாகும் அதிசய துணி கண்டுபிடிப்பு..!!
அதிசயத் துணி கண்டுபிடிப்பு! வெயிலில் சென்றால் தானாகவே குளிர்ச்சியாகும் புதிய தொழில்நுட்பம்!
மின்சாரத்தின் துணையின்றி, நேரடியாகச் சூரிய ஒளியில் இருந்தாலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கக்கூடிய புதிய வகை துணியை சீன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மெட்டா-பேப்ரிக் என்று அழைக்கப்படும் இந்தத் துணி, வருங்காலக் கோடைக்காலத் தேவைகளுக்கு ஒரு புரட்சிகரமான தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெஜியாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குவாங்மிங் தாவோ மற்றும் யாவோகுவாங் மா லைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, இந்தத் துணியை உருவாக்கியுள்ளது. இது ‘பாலிலாக்டிக் அமிலம் எனப்படும் இழை மற்றும் டைட்டானியம் டை ஆக்சைடு நானோ துகள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துணியின் தனித்துவமான அமைப்பு, சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள், கண்ணுக்குத் தெரியும் ஒளி மற்றும் அகச்சிவப்பு ஒளி என 92 சதவீதத்திற்கும் அதிகமான சூரிய ஒளியைத் தடுத்துப் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், இது உடலின் வெப்பத்தை மத்திய-அகச்சிவப்பு கதிர்வீச்சு மூலம் வெளியேற்றுகிறது. இதனால், தீவிர வெயிலிலும் இந்தத் துணி தன்னைத்தானே குளிர்ச்சியாக வைத்துக்கொள்கிறது.
நடைமுறைச் சோதனைகளில், சாதாரண பருத்தித் துணிகளை விட இந்த மெட்டா-ஃபேப்ரிக் 5 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சியாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கார்களை மூடி வைக்க இதைப் பயன்படுத்தியபோது, அதன் மேற்பரப்பு வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது.
இந்தத் துணி எடை குறைவானது, காற்றோட்டமானது மற்றும் நீடித்த உழைக்கக்கூடியது. இது பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கு ஏற்றதாக இருப்பதால், உடைகள், வெளிப்புறக் கூடாரங்கள் மற்றும் கட்டிடத் தளவாடங்கள் தயாரிப்பில் இதைப் பயன்படுத்த முடியும்.
உலகெங்கிலும் அதிகரித்து வரும் வெப்பநிலையால், குளிரூட்டிகளின் பயன்பாடு மின்சாரத்தை பெருமளவில் நுகர்கிறது. இத்தகைய குளிர்ச்சியான துணிகளைப் பயன்படுத்துவதன் மூலம், மின்சாரத் தேவையை வெகுவாகக் குறைக்கவும், கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்திச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் முடியும். வெயில் மிகுந்த நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

You must be logged in to post a comment.