FeaturesLead NewsLocal

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவம் – கூட்டமைப்பு கடும் சொற்போர்!

வடக்கு – கிழக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்த 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டன என்றும், இனிமேல் எஞ்சியுள்ள சிறு பிரச்சினைகளைக் கீழ் மட்டத்தில் முடித்துக் கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடல் நேற்று மாலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் எம்.பிக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், வடக்கு – கிழக்கு ஆளுநர்கள், பாதுகாப்புத்துறைப் பிரதானிகள் கலந்துகொண்டனர்.

காணி விடுவிப்பு குறித்து நேற்றைய கூட்டத்தில் பேசப்பட்டபோது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு – கிழக்கில் கிட்டத்தட்ட 90 வீதமான காணிகள் விடுக்கப்பட்டு விட்டன. இனி இந்த விடயத்தில் தடைகள் ஏதும் இருப்பின் கீழ்மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆளுநர்கள் – எம்.பிக்கள் – படைத்தரப்பு – அரச அதிபர்மார் ஆகியோர் இவற்றைக் கையாளலாம். அதற்கும் மேல் ஏதாவது சிக்கல்கள் வந்தால் என்னிடம் முறையிடுங்கள்” என்றார்.

கடந்த 6 கூட்டங்களில் பேசப்பட்ட விடயங்களே நேற்றும் பேசப்பட்டன. எனினும், தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

வலிகாமம் வடக்கு காங்கேசன்துறையில் 232 ஏக்கர் காணி அளவீடு செய்யப்படவுள்ளது எனவும், மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு காணி அளவீடு செய்யப்படவுள்ளது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது, கடற்படையினர் ஒரு புதிய தகவலை வெளியிட்டனர். காங்கேசன்துறையில் அளவீடு செய்யப்படவுள்ள காணியில் முன்னர் பிரமாண்டமான கடற்படைத் தளம் அமைந்திருந்தது எனவும், அந்தக் காணியையே அளவீடு செய்யவிருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்குக் கூட்டமைப்பு எம்.பிக்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர். இதன்போது அமைச்சர் ராஜித சேனரத்னவும் கூட்டமைப்பின் கருத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். தான் பலமுறை காங்கேசன்துறைக்குச் சென்று வந்தார் என்றும், அங்கு கடற்படை முகாம் இருக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். எனினும், அங்கு கடற்படை முகாம் இருந்ததாகக் கடற்படையினர் விடாப்பிடியாக நின்றனர்.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இராணுவத்தின் காணி விடுவிப்பு தொடர்பான விடயங்களைக் கையாளும் அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன, “வடக்கு – கிழக்கில் 24,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டன. இன்னும் ஒரு சில நூறு ஏக்கர்களே விடுவிக்க வேண்டியுள்ளன” என்று விளக்கமளித்தார்.

உடனே இடைமறித்த சி.சிறிதரன் எம்.பி., “24,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டன என்றால், எங்கெங்கு விடுவிக்கப்பட்டன எனக் கூறுங்கள். நாங்களும் பல வருடங்களாக இந்த விவரத்தைக் கோருகின்றோம். நீங்கள் தர மறுக்கிறீர்கள்” என்று கூறினார்.

எனினும், மேஜர் ஜெனரல் பிரசன்ன 24,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு விட்டன என்று திரும்பத் திரும்பக் கூறினாரே தவிர, எங்கெங்கு விடுவிக்கப்பட்டன எனக் கடைசி வரை கூறவில்லை.

கிழக்கில் விடுவிக்க வேண்டிய காணிகள், வடக்கில் விடுவிக்க வேண்டிய காணிகள் பற்றி எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர். இதன்போது, பாதுகாப்புத் தரப்புக்கும், கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் இடையில் விவாதம் கடுமையாக நடக்க, ஜனாதிபதி சூடாகிவிட்டார்.

“நாடாளுமன்றத்தைப் போல இங்கு விவாதம் நடத்திக் கொண்டிருந்தீர்கள் என்றால் ஒரு முடிவும் எடுக்க முடியாது. இது முடிவெடுக்க வேண்டிய பிரச்சினை. அங்கு (களத்தில்) நின்று பேசினால்தான் ஏதாவது முடிவெடுக்கலாம். இந்தப் பிரச்சினைகள் மற்றும் காணிகள் விடுவிப்பு தொடர்பாக வடக்கு ஆளுநர், இராணுவ அதிகாரிகள், அந்தப் பகுதி கூட்டமைப்பு எம்.பிக்கள் கூடி பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்” என்று தெரிவித்தார் ஜனாதிபதி.

அம்பாறை மாவட்ட காணிகள் தொடர்பாக கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி சுட்டிக்காட்ட, கிழக்கு ஆளுநருடன் பேசி முடிவெடுக்கப் பணித்தார் ஜனாதிபதி மைத்திரி.

ஆளுநருடன் பேசி முடிவெடுக்கும்வரை, இந்தக் காணிகள் அளவீட்டை நிறுத்த வேண்டும் எனக் கூட்டமைப்பின் எம்.பிக்களான மாவைசேனாதிராஜா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வலியுறுத்தினர். எனினும், ஜனாதிபதி அதில் விருப்பம் காட்டவில்லை.

இறுதியில் தொடர் வற்புறுத்தலையடுத்து, இறுதி முடிவெடுக்கும் வரை அளவீட்டை நிறுத்த அரைகுறை மனதுடன் சம்மதித்தார் ஜனாதிபதி.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பற்றிப் பேசப்பட்டது. தற்போது உள்ள பணமான 210 கோடி ரூபாவில் சிறிய விமானங்கள் இறங்கும் விதமாக அபிவிருத்தி செய்வது என்றும், பின்னர் இந்திய உதவி கிடைக்கும்போது பெரிய விமானங்கள் தரையிறங்க ஓடுபாதை அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தித் திட்டம் பற்றியும் பேசப்பட்டது. துறைமுக வேலை நடந்தாலும், அந்தப் பகுதியில் மீள்குடியேற்றம் நடக்கவில்லை எனக் கூட்டமைப்பு குறிப்பிட்டது. ஆனால், அந்தப் பகுதியில் மக்களை அனுமதித்ததாக இராணுவம் சொன்னது. மீளவும் சர்ச்சையாகி, ஜனாதிபதி தலையிட்டு, யாழ்ப்பாணத்திலேயே பேசி முடிவெடுங்கள் என்றார்.

பாதுகாப்பு அத்தியாவசியமுள்ள சில காணிகள்தான் விடுவிக்கப்படவில்லை என இராணுவம் குறிப்பிட்டபோது, பாதுகாப்பு அத்தியாவசியமுள்ள காணிகளை விடுவிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரியும் ஆமோதித்திருந்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading