‘சபைக்கு வருகிறார் மாகந்துர மதுஷ்’ – விரைவில் முழுநாள் விவாதம்!
மாகந்துரே மதூஷ் கைது செய்யப்பட்டமை , அவரின் பாதாள உலகக்குழு செயற்பாடுகள் என்பன தொடர்பில் சபையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என சபாநாயகரிடம், ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது.
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் என்பனவற்றுடன் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கின்றது என பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.எனவே, நாடாளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்துவதன் ஊடாக தம்மிடமுள்ள தகவல்களை வெளிப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜே.வி.பியின் களுத்துறை மாவட்ட எம்.பியான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
” பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் என்பனவற்றின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்களுக்கு உதவிபுரியும் அரசியல்வாதிகள் யார்? என்பன தொடர்பான தகவல்களையும் நாடாளுமன்ற விவாதத்தில் வெளிப்படுத்துவோம்.
அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது குறித்த விவாதத்திற்கான தினம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.” என்றும் கூறினார்.
