Local

பெண் அரசியல் கைதிக்கு 4 வருடத்தின் பின் பிணை!

நான்கு வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான குடும்பப் பெண் ஒருவரை கெப்பரிக்கொல்லாவ நீதிவான் நீதிமன்றம் ரொக்கப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குறித்த குடும்ப பெண் சார்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இவ்வழக்கிற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்துள்ளது.

முல்லைத்தீவு – விஸ்வமடு கிராமத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான ரவீந்திரன் மதனி என்ற குடும்பப் பெண் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக, வெலிமடை பொலிஸாரால் பதவிய சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக தண்டணைக் கோவை சட்டத்தின் கீழ் 443, 369, 394 ஆகிய சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதோடு, கண்ணிவெடி அகற்றும் பொருட்களை கையாண்டுள்ளமை தொடர்பாகவும் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்குகளுக்கான தீர்ப்பு நேற்று கெப்பரிக்கொல்லாவ நீதிவான் நீதிமன்றில் வழங்கப்படும் என எதிர்பார்த்தபோதும் இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் இடமாற்றம் பெற்றுள்ளமையால் வழக்குக்கான கோவை தீர்ப்புக்காக அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த அரசியல் கைதியான பெண்னை 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையில் செல்ல நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு குறித்த நபரை பிணையில் எடுப்பதற்கு நிதி உதவி வழங்கியிருந்தது.

குறித்த வழக்கு விசாரணையின் தீர்ப்புக்காக எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading