Lead NewsLocal

மைத்திரியுடன் மோடி நேரில் பேசியது என்ன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலாலான முக்கிய சந்திப்பு இன்று (31) புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக இந்தியப் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுக்கொண்ட நரேந்திர மோடி, இரண்டாவது தடவையாகவும் நேற்றிரவு பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்தார். அவரது அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் இல்லத்துக்கு இன்று சென்ற ஜனாதிபதி மைத்திரியை இந்தியப் பிரதமர் மோடி மிகுந்த நட்புடன் வரவேற்றார்.

சுமுக கலந்துரையாடலைத் தொடர்ந்து அரச தலைவர்கள் இருவரும் இரு தரப்புக் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், தனது அழைப்பையேற்று பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளியிட்டார்.

மேலும் அண்மையில் இலங்கை முகங்கொடுக்க நேர்ந்த துரதிஷ்டவசமான தீவிரவாதத் தாக்குதல் குறித்து இந்தியப் பிரதமர் வருத்தம் தெரிவித்தார். சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துதல் தொடர்பாகவும் இதன்போது அரச தலைவர்கள் கலந்துரையாடினர்.

தீவிரவாதத்தை ஒழிப்பதற்காகவும் பிராந்தியத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காகவும் ஒன்றிணைந்து செயற்பட அரச தலைவர்கள் இதன்போது உறுதிபூண்டனர்.

இம்முறை நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாகவும் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டமைக்காக தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த இலங்கை ஜனாதிபதி மைத்திரி, அவரது எதிர்வரும் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் மேலும் பலப்படுத்தப்படும் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

நட்பு நாடுகள் என்ற வகையில் நெருக்கமாகச் செயற்படும் அரச தலைவர்களாக இவ்விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படவும் இருவரும் இணக்கம் தெரிவித்தனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading