ரணில், கருவின் ஆசீர்வாதத்துடனேயே தான் வேட்பாளராவார் என்கிறார் சஜித்!
“எனக்கு ஆதரவாக நடத்தப்படும் பேரணிகள் கட்சியைப் பிளவுபடுத்தவதற்காக நடத்தப்படுவனவல்ல. மாறாக, கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கான பேரணிகள். நான் ஆட்சிக்கு வந்தால், குடும்ப அதிகாரத்தை நிறுவப் போவதில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் நான் ஜனாதிபதி வேட்பாளராவேன்.”
– இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ.
அவர் மேலும் கூறுகையில்,
“அதிகாரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் குடும்ப அரசியல் மற்றும் குடும்பத்தினருக்குப் பதவிகளைக் கொடுக்கும் வேலைகளில் ஈடுபடமாட்டேன். எனது குடும்ப சக்தி மக்களின் சக்தி. எனக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்படும் பேரணி யாரையும் எதிர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்படவில்லை. அது ஐ.தே.க. தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி, அதன் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரின் ஆசீர்வாதங்களுடன் நாட்டைக் கட்டியெழுப்ப எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நான் நம்புகின்றேன்.
நாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமும் சுயதொழில் மூலமும் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிப்பதற்கான ஒரே தீர்வு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருவாய் ஈட்டும் முறைகளை அதிகரிப்பதாகும்.
எனது அரசு பெண்களின் சுய வேலைவாய்ப்பை ஊக்கு விக்கும். அதே நேரத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பையும் வழங்கும்.
நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். மத வேறுபாடின்றி வழிபாட்டுத் தலங்கள் அபிவிருத்தி செய்யப்படும்.
நான் மாளிகைகளில் நேரத்தைச் செலவிட மாட்டேன், என் தொடக்கங்களை மறக்கமாட்டேன். அதிகாரத்துக்கு என்னை வரவழைத்தால், நான் மக்களுடன் இணைந்து செயற்படுவேன்” – என்றார்.

