ரணில், சஜித், கரு எனத் துண்டாகியது ஐ.தே.க.! – மஹிந்த அணி கூறுகின்றது
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்காக ஐக்கிய தேசியக் கட்சி மூன்று பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளது எனப் புதிய ஹெல உறுமயவின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“ஐக்கிய தேசியக் கட்சி தற்போது ரணில், சஜித் மற்றும் கரு ஆகிய மூன்று பிரிவுகளாகப் பிளவடைந்துள்ளது.
சிலர் இந்த மூவரில் யார் வந்தால் சிறந்தது என யோசித்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், மூவரும் ஒரே விதமானவர்கள்.
கடந்த காலங்களில் குறித்த மூவரினால் நாட்டை நிர்வகிக்க முடியாமல் போனது என்பது புலனாகின்றது.
களவு, கொள்ளைகளில் பரந்த அறிவையுடைய அவர்களுக்கு நாட்டை முகாமைத்துவம் செய்ய முடியாது. இதனை கடந்த நான்கு வருடங்களாக அவதானித்துள்ளோம்.
நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவாக வேண்டும் என ஐ.தே.கவின் பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகின்றார்கள். ஆனால், எமது ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாமல் கவர்ச்சிகரமானவராகத் திகழ்வார்” – என்றார்.

