போதைப்பொருட்களுக்கு முடிவுகட்ட ஏப்ரல் 3 முதல் அசுரவேகத்தில் தேடுதல் வேட்டை!
போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான திடீர் சுற்றிவளைப்பு, தேடுதல் வேட்டை ஆகியன ஏப்ரல் 3 ஆம் திகதி மேலும் விரிவுபடுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ( 25) தெரிவித்தார்.
கொழும்பு நகரிலும், கரையோரப் பிரதேசங்களை அண்டிய பகுதிகளிலும் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து மிகவும் பலமான முறையில் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறினார்.
ஹிங்குரக்கொட ஆனந்த மகளிர் கல்லூரியின் புதிய நீச்சல் தடாகத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி,
” ஹொரோயின் போதைப்பொருள் சகிதம் கப்பலொன்றை படையினர் கைப்பற்றினர். எனினும், படையினர் சுற்றிவளைக்கவுள்ளனர் என்பதை அறிந்துகொண்வர்கள் 500 கிலோவரையான போதை பொருட்களை கடலில் கொட்டியுள்ளனர்.
இன்று பிரபலமான சில பாடசாலைகளில் உயர்தர மாணவர்கள் சிலர் போதைப்பொருளுக்க அடிமையாகியுள்ளனர். இதனால், பாடசாலை நிர்வாகம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அத்துடன், பெண் பிள்ளைகள் சிலரும் போதையைதேடும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, தமது பிள்ளைகள் குறித்து பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். அப்போதுதான் கௌரவமானதொரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் மேலும் விரிவுபடுத்தப்படும்.” என்றும் தெரிவித்தார்.
மாவட்டத்தில் உள்ள பாடசாலை பிள்ளைகளின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 450 இலட்சம் ரூபா செலவில் மேற்படி நீச்சல் தடாகம் இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து நீச்சல் தடாகத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி , மாணவர்களின் நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.
வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
