வடக்கில் இடி மின்னல்; இளைஞர் ஒருவர் பலி! – தீப்பற்றி எரிந்தன தென்னை மரங்கள்
முல்லைத்தீவு – விசுவமடு, புத்தடி பகுதியில், இன்று மாலை 3 மணியளவில், இடி மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொட்டியடி – விசுவமடுவைச் சேர்ந்த 18 வயதுடைய தர்மபாலசிங்கம் தயானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். 24 வயதான கணேசமூர்த்தி கிரிசன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த இருவரும் குளிக்கச் சென்றிருந்தபோது, மரத்தடியில் நின்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, மின்னல் தாக்கியுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்துக்கு இலக்கான மற்றுமொரு இளைஞர் தர்மபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம், வலிகாமத்தின் பல இடங்களில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் காற்று வீசியதுடன், இடியுடன் கூடிய மழை ஆரம்பித்தது.
இதன்போது, யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் சிவன் அம்மன் கோவிலடியில் இடி வீழ்ந்ததில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. எனினும், சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படை தீயை அணைத்தது.
(சண்முகம் தவசீலன், எம்.றொசாந்த், டி.விஜிதா, சுப்பிரமணியம் பாஸ்கரன்)

