Lead NewsLocal

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்! – குட்டி யானைகளை மிரட்டி அடக்கினார் பிரதமர்

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கு வாக்கெடுப்பை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஐ.தே.கவின் பின்னிலை எம்.பிக்களின் சார்பில் சமிந்த விஜேசிறியால் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும்,  வாக்கெடுப்பு அவசியமில்லை என்று சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவும் பிரதமர் ரணிலும் அறிவித்தனர்.

இதையடுத்து இன்று (13)  விவாதத்துக்குட்படுத்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அவற்றின் கீழான நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர் முற்பகல் 10.30 மணியளவில் குழுநிலை விவாதம் ஆரம்பமானது.

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள், பிரதமருக்கான ஒதுக்கீடுகள் உட்பட 22 ( நிறுவனங்கள், திணைக்களங்கள்) தலைப்புகளுக்கான குழுநிலை விவாதம் நடைபெற்றாலும், முற்பகல் முதல் மாலை வரை ஜனாதிபதி தொடர்பிலேயே ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் பலகோணங்களில் கருத்துகளை முன்வைத்தனர்.

குறிப்பாக ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்களும், ஜே.வி.பியினரும் ஜனாதிபதி மைத்திரியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு சார்பாக கருத்துகளை முன்வைத்தனர். மாலை 6. 35 மணியளவில் விவாதம் முடிவடைந்தது.

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் சிலர் கடந்த சில நாட்களாகவே வியூகம் வகுத்து வந்தனர். சுமார் 30 எம்.பிக்கள் எதிராக வாக்களிப்பார்கள் என்று முஜிபூர் ரஹ்மான் எம்.பி. அறிவித்திருந்தார்.

இதன்படி விவாதம் முடிவடைந்த பின்னர், ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்களின் சார்பில் சமிந்த விஜேசிறி – ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கு வாக்கெடுப்பைக் கோரினார். அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிதி ஒதுக்கீடு நிறைவேறியது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading