இனி விழுந்த பல் மீண்டும் முளைக்கும்…!!!
பற்கள் இழந்தவர்களுக்கு ஒரு நற்செய்தி! விழுந்த பல் மீண்டும் முளைக்கும் – ஆச்சரியப்படுத்தும் ஜப்பான் விஞ்ஞானிகள்!
கியோட்டோ பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களுக்கு இயற்கை முறையில் பற்களை மீண்டும் வளரச் செய்யும் TRG-035 என்ற புதிய மருந்தின் சோதனையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர். இது ‘மோனோக்ளோனல் ஆன்டிபாடி வகையைச் சேர்ந்த ஒரு சோதனை மருந்தாகும்.
மனித தாடையில் பற்களின் வளர்ச்சிக்கு ஆதாரமான கருக்கள் உறக்க நிலையில் இருக்கும். USAG-1 என்ற புரதம் இந்த பற்கள் வளராமல் தடுத்து வைத்திருக்கும். இந்த புதிய மருந்து, அந்த புரதத்தின் செயல்பாட்டைத் தடுத்து, மறைந்திருக்கும் பற்களை மீண்டும் இயற்கையாக வளரத் தூண்டுகிறது.
விபத்து அல்லது வயது முதிர்வு காரணமாக பற்களை இழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும்.
பிறவிலேயே பற்கள் வளராத குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இது வெற்றிகரமாக அமைந்தால், செயற்கை பல் செட் மற்றும் இம்ப்ளான்ட்ஸ் ஆகியவற்றின் தேவையே இனி இருக்காது.
தற்போது முதற்கட்டமாக, 30 முதல் 64 வயதுடைய 30 ஆண்களிடம் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு கடவாய்ப்பல்லாவது இல்லாமல் இருக்க வேண்டும். இவர்களுக்கு நரம்பு வழியாக மருந்து செலுத்தப்பட்டு, அடுத்த 11 மாதங்களுக்குப் பற்களின் வளர்ச்சி மற்றும் பக்கவிளைவுகள் குறித்துக் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.
இதற்கு முன்னதாக ஃபெர்ரெட்ஸ் மற்றும் எலிகள் போன்ற விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனைகளில், எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி முழுமையான பற்கள் வளர்ந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த ஆராய்ச்சியை டாக்டர் கட்சு தகாஹஷி தலைமையிலான குழுவினர் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தால், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த மருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என டோரேஜெம் பயோபார்மா நிறுவனம் எதிர்பார்க்கிறது. இது நவீன பல் மருத்துவத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகக் கருதப்படுகிறது.

You must be logged in to post a comment.