World

இம்ரான் கானின் உடல்நிலை குறித்து அதிர்ச்சித் தகவல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், சிறையில் தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், உரிய மருத்துவச் சிகிச்சை வழங்கப்படாவிட்டால் உயிருடன் சிறையிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், தனக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்க சிறை நிர்வாகம் தொடர்ந்து தடையாக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் புயல் ; இம்ரான் கானின் உடல்நிலை குறித்து அதிர்ச்சித் தகவல் | Shocking Information Imran Khan Health Condition

இதுதொடர்பாக பாகிஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவர் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தக் கடிதத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தனது உடல்நலத்தின் மீது சிறை நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நீண்டகாலமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதற்கிடையே, அவருக்கு உடனடியாகச் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு உரிய பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமருக்குச் சிறையில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இம்ரான் கானின் உடல்நிலையை முன்வைத்து அவரது கட்சியினர் அரசுக்கு எதிராகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சிறையில் இம்ரான் கானின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டங்கள் வெடிக்கும் என அவரது கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பான இந்த விவகாரம் பாகிஸ்தானின் அரசியல் சூழலில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading