Local

இலங்கையில் புதிய திட்டம்.. வாகன இலக்கங்களுக்கு பதிலாக உரிமையாளரின் பெயர்?

இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, தனிநபர்களின் பெயர்கள் அல்லது வணிக நிறுவனங்களின் பெயர்களை உள்ளடக்கிய விசேட இலக்கத் தகடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டால், வாகன உரிமையாளர்கள் தமது சொந்தப் பெயர் அல்லது வணிக நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட விசேட இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

அத்துடன், அரசாங்கத்துக்கு மேலதிக வருமானத்தை ஈட்டும் நோக்கில் விசேட வாகனப் பதிவு இலக்கங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு அதிக தெரிவுகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எனினும், இந்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்ப, சட்ட மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வாகனப் பதிவு முறையை நவீனமயப்படுத்துதல் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading