ஆசிரி சென்ட்ரல் வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ அறிக்கை
கனம் மதிப்பிற்குரிய பொது மக்களுக்கு,
ஆசிரி சென்ட்ரல் வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்ற உயிரிழப்புச் சம்பவம் குறித்தும், இச்சம்பவம் தொடர்பில் மருத்துவ அலட்சியம் இடம்பெற்றுள்ளதாகக் கூறி பொதுவெளியில் பரப்பப்பட்டு வரும் பொய்யான மற்றும் ஆதாரமற்ற தகவல்கள் குறித்தும் அண்மையில் எழுந்துள்ள ஊகங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
இந்தத் துயரமான தருணத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது அன்பிற்குரியவர்களுக்கும் ஆசிரி சென்ட்ரல் வைத்தியசாலை தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆசிரி சென்ட்ரல் வைத்தியசாலை மிகக் கவனமாகவும் பொறுப்புணர்வுடனும் கையாள்கிறது. நோயாளி சிகிச்சையில் இருந்த காலம் முழுவதும், நிறுவப்பட்ட மருத்துவ நடைமுறைகள் மற்றும் தொழில்முறை தரநிலைகளுக்கு அமைவாகப் பொருத்தமான மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதில் எமது மருத்துவ மற்றும் சுகாதாரக் குழுவினர் உறுதியுடன் செயற்பட்டனர்.
ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதை அல்லது பரப்புவதை தவிர்க்குமாறும், அதிகாரபூர்வ நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே நம்பியிருக்குமாறும் பொதுமக்களையும் ஊடகங்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய ஆதாரமற்ற கூற்றுகள் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், மருத்துவத் துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களின் நற்பெயருக்குப் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும்.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களுக்கு மாறாக, வைத்தியசாலைக் கட்டணங்கள் செலுத்தப்படாதிருந்த போதிலும், உயிரிழந்தவரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
நோயாளர் பராமரிப்பு, தொழில்முறை நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் மிகவுயர்ந்த தரநிலைகளைப் பேணுவதில் ஆசிரி சென்ட்ரல் வைத்தியசாலை தொடர்ந்தும் உறுதியுடன் உள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவும், உரிய சட்டப்பூர்வ நடைமுறைகளை மதிக்கவும் நாங்கள் தொடர்ந்து கடமைப்பட்டுள்ளோம்.
இவ்விடயம் குறித்துப் பொருத்தமான வழிமுறைகள் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களும் ஊடகங்களும் மிகுந்த உணர்திறனுடன் நடந்து கொள்ளுமாறும், வீண் ஊகங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
நிர்வாகம்
ஆசிரி சென்ரல் வைத்தியசாலை

You must be logged in to post a comment.