சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னால் இயங்கும் வியாபாரத் தந்திரம்…!!!
சமீபத்தில் பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு, எதிர்க்கட்சியான conservative கட்சியின் தலைவர் கேமி பேடனாக் (Kemi Badenoch), நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த £10 பில்லியன் மதிப்பீட்டில் ‘Britannia Shield” or Britannia Dome” என்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கப் போவதாக அறிவித்ததாகும்.
தற்போதைய தொழிற்கட்சி (Labour Party) அரசாங்கம் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டோடு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ராணுவ பாதுகாப்பு திட்டங்களின் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் வணிக உண்மைகளை நாம் ஆழமாக ஆராய வேண்டியது அவசியமாகிறது.
இன்றைய காலகட்டத்தில், நாடுகளின் பாதுகாப்புத் தேவைகள் என்பது வெறும் நாட்டுப் பாதுகாப்பு சார்ந்தவை மட்டுமல்ல, மாறாக, அது பன்னாட்டு ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களின் (Military-Industrial Complex) வணிக லாபத்தை அடிப்படையாகக் கொண்டவை.
இந்த நிறுவனங்கள் இன்றிலிருந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான தங்களது லாப இலக்குகளை (Profit Forecast) முன்கூட்டியே துல்லியமாக கணக்கிடுகின்றன.
தற்போதைய லாபத்தை விட குறிப்பிட்ட சதவீதம் அதிகமாக லாபம் ஈட்ட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.
உதாரணமாக, பிரிட்டனின் முன்னணி பாதுகாப்பு நிறுவனமான BAE Systems, 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் £84.0 பில்லியன் மதிப்பிலான சாதனைகளைப் பதிவு செய்துள்ளது. மேலும், இதன் Operating Profit – EBIT ஆண்டுக்கு ஆண்டு 10% முதல் 12% வரை வளர்ச்சியடையும் என்றும், 2026-ஆம் ஆண்டில் மட்டும் £2 பில்லியனுக்கும் அதிகமான பணப்புழக்கத்தை (Free Cash Flow) ஈட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் இதே போன்ற பெரிய நிறுவனங்கள் பல நூறு பில்லியன் டாலர் லாப இலக்குகளுடன் இயங்கி வருகின்றன.
Military-Industrial Complex MIC )என்றால் என்ன என்பதை முதலில் பார்க்கலாம்.
Military industrial complex என்பது ஒரு நாட்டின் இராணுவம், அரசாங்கம் மற்றும் தனியார் ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையேயான ரகசிய மற்றும் பலமான கூட்டுச் சதியைக் குறிக்கிறது.
இந்த அமைப்பில், நாட்டின் பாதுகாப்பு கொள்கைகளும் பட்ஜெட்டும், உண்மையான நாட்டுப் பாதுகாப்பிற்காக அல்லாமல், ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களின் லாபவெறி மற்றும் அரசியல்வாதிகளின் தேர்தல் நலன்களை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன.
இந்தக் கூட்டாண்மையை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் Dwight D. Eisenhower 1961-ஆம் ஆண்டு தனது பிரியாவிடை உரையின் போது எச்சரித்தார். இதன்மூலம் அரசுப் பணம் பொதுமக்களின் நலனுக்குச் செல்லாமல், பன்னாட்டு ஆயுத ஆலைகளின் லாபப் பெட்டியை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படுகிறது என குறிப்பிட்டார்.
உலகளாவிய ஆயுதச் சந்தையிலும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு ஒப்பந்தங்களிலும் கோலோச்சும் மிகப்பெரிய ஐந்து ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் ‘Big 5’ என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன:
1-மார்ட்டின் (Lockheed Martin): உலகின் நம்பர் one பாதுகாப்பு ஒப்பந்ததாரர். F-35 ரக போர் விமானங்கள், THAAD ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பல்வேறு அதிநவீன ஏவுகணைகளைத் தயாரிப்பதில் முன்னணி வகிக்கிறது.
2- RTX – முன்னர் Raytheon Technology ): Patriot ஏவுகணை அமைப்புகள், ஸ்டிங்கர் மற்றும் Tomahawk ஏவுகணைகள் மற்றும் போர் விமான இயந்திரங்களை (Pratt & Whitney) தயாரிக்கும் ராட்சத நிறுவனம்.
3-General Dynamics: ஆப்ராம்ஸ் (Abrams) பீரங்கிகள், வெர்ஜீனியா ரக அணுசக்தி submarines (நீர்மூழ்கிக் கப்பல்கள்) மற்றும் இராணுவத் தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதில் புகழ்பெற்றது.
4-Boeing Defense: F/A-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானங்கள், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் விண்வெளி பாதுகாப்பு அமைப்புகளைத் தயாரிக்கும் நிறுவனம்.
5-Northrop Grumman): B-21 ரக அதிநவீன ஸ்டெல்த் (Radar-க்குத் தெரியாத) குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் அணு ஆயுத ஏவுகணைகளைத் தயாரிப்பதில் சிறப்புப் பெற்ற நிறுவனம்.
மேற்குறிப்பிட்ட இந்த military industrial complex ன் லாப வெறிக்கு அரசாங்கங்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதற்காகத் தான் லாபிங் (Lobbying) எனப்படும் அரசியல் லாபி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களைத் தாங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, பாதுகாப்பு நிதியை (Defense Budget) தங்களது நிறுவனங்களுக்கு ஒதுக்கச் செய்வதே இந்த லாபியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த மாபெரும் நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்றால், மக்களுக்கு ஒரு நிரந்தரமான அச்சுறுத்தல் கண்முன்னே நிறுத்தப்பட வேண்டும். அதற்காகத் தான் செயற்கையாக மோதல்கள் மற்றும் பதற்றங்கள் உருவாக்கப்படுகின்றன அல்லது பெரிதுபடுத்தப்படுகின்றன.
ரஷ்யா மீதான பயமும் அச்சுறுத்தலும் இன்று நேற்று வந்ததல்ல; பனிப்போர் (Cold War) காலத்திலிருந்தே இது தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் தங்களது ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு இந்த மாதிரியான புவிசார் அரசியல் பயங்கள் (Geopolitical Fears) ஒரு மிகச் சிறந்த கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மக்களை அச்சத்தில் ஆழ்த்தி, “நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது, உடனடியாக ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் வேண்டும்” என்று குரல் கொடுக்க வைக்க இந்த அச்சுறுத்தல்கள் (False Flag & Threat Narratives) அரசியல்வாதிகள் மூலம் திட்டமிட்டு மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு முன்னர் பலதடவைகள் நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.
ஆயுத நிறுவனங்கள் தங்களது பில்லியன் கணக்கான டாலர் லாபத்தைத் தொடர்ச்சியாகப் பெற, உலகம் எதிலாவது ஒரு மோதலில் அல்லது பனிப்போரில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதற்காக அரசியல்வாதிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட அல்லது ஊதிப்பெரிதாக்கப்பட்ட (Manufactured Conflicts) சில முக்கிய வரலாற்று நிகழ்வுகள்:
சதாம் ஹுசைனிடம் பெரும் அழிவு ஆயுதங்கள்” (Weapons of Mass Destruction) இருப்பதாகப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு, இராக் மீது போர் தொடுக்கப்பட்டது. இந்தப் போரின் முடிவில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்; ஆனால் Lockheed Martin , Boeing போன்ற நிறுவனங்கள் தங்களது ஆயுதங்களை விற்று கோடிக்கணக்கில் லாபம் பார்த்தன.
சோவியத் யூனியனின் அச்சுறுத்தல் என்ற பெயரில் அமெரிக்காவும் அதன் நேட்டோ (NATO) கூட்டாளிகளும் தேவையற்ற முறையில் கோடிக்கணக்கான டாலர்களை ஆயுதக் குவிப்புக்காகச் செலவிட்டன. இதை Cpld war arms race என்பார்கள். இது சோவியத் யூனியனின் பொருளாதார வீழ்ச்சிக்கே வழிவகுத்தது.
சவுதி அரேபியா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்குப் தொடர்ச்சியாகப் பாதுகாப்பு உதவிகள் மற்றும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக பிராந்தியத்தில் பதற்றங்கள் ( Middle East Tensions)செயற்கையாகத் தக்கவைக்கப்படுகின்றன. ஒரு பகுதியில் சண்டை நின்றால், மற்றொரு பகுதியில் புதிய எதிரியை உருவாக்கி ஆயுதச் சந்தையை இந்த Military Industrial Complex சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது.
அமைதியை விரும்புவதை விட போரையும் பயத்தையும் வியாபாரமாக்குவதே இந்த military industrial complex ன் பிரதான நோக்கமாகும்.
இப்பொழுது விடயத்திற்கு வருவோம்,
கேமி பேடனாக் ( Kemi Bedonoch) போன்ற அரசியல் தலைவர்கள் வெளியிடும் £10 பில்லியன் ‘Britania Shield ‘ போன்ற அறிவிப்புகள், தன்னிச்சையாக மக்களது பாதுகாப்பு நலனைக் கருதி எடுக்கப்பட்டவை அல்ல.
இவை Military Industrial Complex ன் தூண்டுதல்களாலும், அவர்களின் லாப வெறிக்குப் பரிசளிக்கும் வகையிலுமே உருவாக்கப்படுகின்றன.
புள்ளிவிவரங்களின்படி, பிரிட்டனின் Defense Investment Plan அடுத்த நான்கு ஆண்டுகளில் £298 பில்லியன் வரை ஒதுக்கீடு செய்துள்ளது.
இங்கிலாந்தின் பாதுகாப்புச் செலவினம் GDPயில் 2.6%-ல் இருந்து 2027-க்குள் 2.7%-ஆகவும், 2035-க்குள் 3.5%-ஆகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்டமான நிதி எங்கு செல்கிறது? அத்தனையும் இந்த இராணுவத் தொழில்துறை நிறுவனங்களின் வங்கிக்கணக்கில் தான் விழுப்போகின்றது.
Militants industrial complex ற்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையேயான இந்த ரகசியக் கூட்டு, உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
உண்மையான மக்களின் நலனுக்காகச் செலவிடப்பட வேண்டிய பில்லியன் கணக்கான பொதுத்துறைப் பணம், military Industrial Complex ன் லாபப் பெட்டியை நிரப்புவதற்காகத் திசை திருப்புப்படுகிறது.
ரஷ்யா போன்ற நாடுகளின் பெயரைக் கூறி தேவையற்ற பயத்தை உருவாக்கி, அதன் மூலம் தங்களது பங்குகளின் விலையை உயர்த்துவதும், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான பில்லியன் கணக்கான லாபத்தை உறுதி செய்வதுமே இந்தத் துறையின் மறைமுக அஜெண்டா ஆகும்.
அரசியல் தலைவர்களின் போர்க்களப் பேச்சுகளுக்குப் பின்னால் இயங்கும் இந்த வியாபார தந்திரத்தை பிரித்தானிய மக்கள் புரிந்துகொள்வதே இத்தகைய அபாயங்களிலிருந்து தப்பிப்பதற்கான முதல் படியாகும்.

You must be logged in to post a comment.