டெல்லியில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம்
yuge yugeen bharat museum as world largest museum to open in delhi: டெல்லியில் ரூ.3,230 கோடி மதிப்பீட்டில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகை அருகே உள்ள ரெய்சினா ஹில் பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு தொகுதி கட்டிடங்கள் உள்ளன.
இங்கு செயல்பட்டு வந்த பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அமைச்சக செயலகங்கள், புதிய இடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், இங்கு உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை இந்தியா திறக்க உள்ளது.

இந்தியாவின் நாகரிகப் பயணத்தை ஆவணப்படுத்தும் ஒரு தேசிய அருங்காட்சியகமாக யுகே யுகீன் பாரத் அருங்காட்சியகம் (Yuge Yugeen Bharat Museum) குறித்த அறிவிப்பை 2023 மே 18 அன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இந்த திட்டத்திற்கு மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ரூ.3,230 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதலுக்கு பின்னர் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகக் காட்சிப் பகுதியாக மாறுவதைக் கற்பனை செய்து பாருங்கள்?
அதன் பிரம்மாண்டத்தை எண்ணிப் பாருங்கள். கலாச்சாரத்தை எண்ணிப் பாருங்கள். அதுதான் யுக யுகீன் பாரத் அருங்காட்சியகத்தின் பின்னணியில் உள்ள தொலைநோக்குப் பார்வை!
இன்றைய அமைச்சரவை முடிவு, வரலாற்றுச் சிறப்புமிக்க வடக்கு மற்றும் தெற்கு தொகுதி கட்டிடங்களை, பாரதத்தின் நாகரிகப் பயணத்தின் ஒரு அற்புதமான கொண்டாட்டமாக மாற்றுவதற்கு உத்வேகம் அளிக்கும்.
பண்டைய அறிவு அமைப்புகள், கணிதம் மற்றும் வானியல் முதல் கட்டிடக்கலை, கலை, மொழிகள் மற்றும் ஆன்மீகம் வரை, இந்த அருங்காட்சியகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகால நமது பாரம்பரியத்தை ஆழ்ந்த அனுபவங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த காட்சிக்கூடங்கள் மூலம் உயிர்ப்பிக்கும்.
ஆட்சி மையங்களாக விளங்கிய கட்டிடங்கள், இனி கோடிக்கணக்கான மக்கள் நமது நாகரிகத்தின் காலத்தால் அழியாத செழுமையைக் கண்டறிந்து, அனுபவித்து, கொண்டாடும் இடமாக மாறும். இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய அத்தியாயம்!” என தெரிவித்துள்ளார்.
‘அலங்காரம்’ என்ற கருப்பொருளிலான முதல் தொடக்கக் காட்சியகம், 2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வடக்குத் தொகுதியில் பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2031 ஆம் ஆண்டில் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்மொழியப்பட்ட 1,78,509 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த அருங்காட்சியகம், காட்சிப்படுத்தும் பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய அருங்காட்சியகம் மற்றும் பிற கலாச்சார அமைச்சக அருங்காட்சியகங்கள், இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் (ASI) 52 கள அருங்காட்சியகங்கள், பல்வேறு மாநில அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளிலிருந்து சுமார் 18 லட்சம் பொருள்கள் இங்கு காட்சிப்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
பயணச்சீட்டு விற்பனை, வழிகாட்டுச் சுற்றுப்பயணங்கள், உணவு மற்றும் பான வசதிகள், சில்லறை விற்பனை நிலையங்கள், நிகழ்வுகள், இட வாடகை மற்றும் டிஜிட்டல் அனுபவங்கள் ஆகியவற்றின் மூலமாகவும் வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு கோடி பார்வையாளர்களை கையாளும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

You must be logged in to post a comment.