மின்கல சக்தி சேமிப்பு தீர்வுகளுடன் தனது சூரியசக்தி பிரிவை விரிவுபடுத்தும் DIMO Energy
DIMO நிறுவனத்தின் மின்சாரம் மற்றும் வலுசக்தி தொடர்பான தீர்வுகளை வழங்கும் பிரிவான DIMO Energy, தனது சூரியசக்தி தீர்வுகளை, கைத்தொழில் மற்றும் வர்த்தகப் பயன்பாடுகளுக்கு அப்பால் வீட்டுத் தேவைகளுக்கும் உள்ளடங்கும் வகையில் விரிவுபடுத்தியுள்ளது. அத்துடன், இலங்கையின் வளர்ந்து வரும் மின்கல சக்தி சேமிப்பு தொகுதிகள் (Battery Energy Storage Systems – BESS) சந்தையிலும் அது பிரவேசித்துள்ளது. ஒருங்கிணைந்த Solar + BESS தீர்வுகளை வழங்கும் நோக்கில், இது தற்போது பிரத்தியேகமான ‘DIMO Solar’ எனும் வர்த்தகநாமத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிடையே நம்பகமான மற்றும் சுயாதீனமான வலுசக்தி தீர்வுகளுக்கான அதிகரித்து வரும் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகக் கட்டமைப்பில் உள்ள தடைகள், அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்கள், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பயன்பாட்டின் வேகம் அதிகரிப்பு ஆகியன காரணமாக, வலுசக்தி சேமிப்பு என்பது உலகளாவிய ரீதியிலும் உள்ளூர் ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு காலகட்டத்தில் இந்த விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வலுசக்தி மாற்றத்தில் மின்கல அடிப்படையிலான வலுசக்தி சேமிப்பு எதிர்வரும் வருடங்களில் மேலும் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், இது மின் விநியோகக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை, சூரியசக்தி மின்சாரத்தின் சுய நுகர்வு மற்றும் மின்சாரத் தடைகளுக்கு எதிரான நெகிழ்ச்சித் தன்மை போன்றவற்றை மேம்படுத்தும் என்றும் தொழில்துறை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வலுசக்தி மற்றும் மின்சார பொறியியல் துறைகளில் நீண்டகால அனுபவத்தைக் கொண்டுள்ள DIMO நிறுவனம், சந்தையில் வெறுமனே தயாரிப்புகளை மட்டும் விற்பனை செய்யாமல், தீர்வு சார்ந்த விநியோகத்தை BESS மையமாக கொண்டுள்ளது. நிறுவனம் தனது வலுசக்தி சேமிப்பு துறையை வலுப்படுத்துவதற்காக GoodWe, Huawei, Jinko, JA, AE போன்ற உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப பங்காளிகளுடனும் ஏனைய முன்னணி சர்வதேச வர்த்தகநாமங்களுடனும் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றது.
DIMO நிறுவனத்தின் BESS தீர்வுகள் 5kWh முதல் ஆரம்பமாகும் மொடியுலர் (modular) வகைகளில் இருந்து வழங்கப்படுகிறது. இது வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகளின் வலுசக்தி சேமிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இப்பிரிவில் அன்றாட வீட்டுப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட சிறிய மற்றும் குறைந்த சத்தத்தை (low-noise) கொண்ட தொகுதிகளும், பெரிய வீடுகள் மற்றும் சிறியது முதல் நடுத்தர வர்த்தக பயன்பாடுகளுக்கு ஏற்ற உயர் அழுத்த (high-voltage) தீர்வுகளும் உள்ளடங்குகின்றன. இந்த தொகுதிகள் 5kWh முதல் 16kWh வரையிலான மின்கல கொள்ளவுகளைக் கொண்டுள்ளதுடன், சேமிப்புத் தேவையைப் பொறுத்து மேலும் விரிவுபடுத்தப்படக் கூடியவை.
இந்த விரிவாக்கம் குறித்து, DIMO நிறுவனத்தின் மின்சாரம் மற்றும் வலுசக்தி பிரிவின் பொது முகாமையாளர் ஷெஹான் அமரதுங்க தெரிவிக்கையில், “தனித்தனி பாகங்களை வழங்குவதை விட, ஆரம்பம் முதல் இறுதி வரையிலான முழுமையான வலுசக்தி தீர்வுகளை வழங்கும் திறனிலேயே இந்நிறுவனத்தின் போட்டித்தன்மை உள்ளது. அதிக போட்டிமிக்க சந்தையில், எமது நோக்கம் வெறுமனே தயாரிப்பை வழங்குவது மட்டுமல்ல; உலகளாவிய ரீதியில் நம்பகமான வர்த்தகநாமங்கள் மற்றும் எமது தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, தொகுதியை வடிவமைத்தல் மற்றும் பொறியியல் முதல் நிறுவுதல் மற்றும் நீண்டகால விற்பனைக்குப் பின்னரான ஆதரவு வரை விரிவான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதே எமது நோக்கமாகும்.” என்றார்.
DIMO Energy நிறுவனத்தின் BESS பிரிவானது பாதுகாப்பை மையமாகக் கொண்ட வடிவமைப்பு மற்றும் நம்பகமான செயல்திறனைக் கொண்டுள்ளது. இது பாதுகாப்பான வலுசக்தி சேமிப்பை உறுதி செய்வதற்காக பல அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், இந்த தொகுதிகள் சத்தமின்றி அமைதியாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சூழல்களுக்கு மிகவும் பொருத்தமானவையாகும்.
தனது சிறந்த சேவைக்கான நற்பெயரை உறுதிப்படுத்தும் வகையில், DIMO Energy நிறுவனம் அதன் BESS வணிக பிரிவிற்கென ஒரு பிரத்தியேக விற்பனைக்குப் பின்னரான கட்டமைப்பை நிறுவியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் சந்தேகங்கள் மற்றும் சேவை தொடர்பான தேவைகளுக்கு 24 மணிநேரத்திற்குள் பதிலளிக்க உறுதியளிக்கிறது. இவற்றுக்கு இணையாக, வலுசக்தி சேமிப்புத் தீர்வுகளின் மலிவுத் தன்மை மற்றும் அவற்றிற்கான அணுகல் வசதியை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை நிறுவனம் உருவாக்கி வருவதுடன், இது இலங்கை முழுவதும் அவற்றின் பயன்பாட்டைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
‘Powering the Future’ (எதிர்காலத்திற்காக வலுவூட்டல்) எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விரிவாக்கமானது, வலுசக்தித் துறையில் DIMO Energy நிறுவனத்தின் பங்கை மேலும் வலுப்படுத்துவதுடன், மீளெழுச்சித்திறன் மிக்க, பரவலாக்கப்பட்ட மற்றும் நிலைபேறான மின்சார கட்டமைப்புகளை நோக்கிய இலங்கை எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு ஆதரவளிக்கிறது

You must be logged in to post a comment.