World

வானிலை மாற்றத்தால் சொகீலேட் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!

பிரித்தானியாவில் சொக்லேட் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – உலகளாவிய வானிலை மாற்றத்தால் எச்சரிக்கும் நிபுணர்கள்!

பிரித்தானியாவில் சொக்லேட் உள்ளிட்ட சில முக்கிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என Energy and Climate Intelligence Unit எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக உணவு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு உலகின் பல பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், சக்திவாய்ந்த Super El Niño உருவாகும் சூழலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் மே மாதம் முதல் இதுவரை ஐந்து வெப்ப அலைகள் பதிவாகியுள்ளதுடன், மேலும் ஒரு வெப்ப அலை எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனுடன் வறட்சி நிலைமையும் பிரித்தானியாவின் விவசாயத் துறைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விவசாய உற்பத்தி குறைவது, இறைச்சிக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கான உணவு விநியோகத்தை பாதிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகளவில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள், அதனை சமாளிப்பதற்கான வளங்களைக் குறைவாகக் கொண்ட நாடுகளாகவே இருப்பதாக ECIU ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்நாடுகளில் பல, பிரித்தானியாவுக்கு முக்கிய உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளாகவும் உள்ளன.

குறிப்பாக Côte d’Ivoire மற்றும் Ghana ஆகிய நாடுகள் உலகின் முன்னணி கொக்கோ உற்பத்தியாளர்களாக உள்ளன. காலநிலை மாற்றத்தால் அங்குள்ள கொக்கோ உற்பத்தி பாதிக்கப்பட்டால், பிரித்தானியாவில் சாக்லேட் உற்பத்தி மற்றும் விலைகளிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் அதிக ஆபத்தில் உள்ள நாடுகள், பிரித்தானியாவின் மொத்த உணவு இறக்குமதியில் சுமார் 13 சதவீதத்தைக் கொண்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் 8.9 பில்லியன் பவுண்டுகள் என ECIU தெரிவித்துள்ளது. அந்தக் குழுவில் உள்ள 15 முக்கிய விநியோக நாடுகள் மட்டும் 7.4 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான உணவுப் பொருட்களை பிரித்தானியாவுக்கு வழங்குகின்றன.

இதற்கிடையில், பிரித்தானியாவில் சொக்லேட் தயாரிப்பாளர்களும் அதிகரித்து வரும் வெப்பநிலையின் தாக்கத்தை எதிர்கொள்கின்றனர். Hull நகரைச் சேர்ந்த Cocoa Chocolatier நிறுவனம் கடுமையான வெப்பம் காரணமாக தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள Hotel Chocolat நிறுவனத்தின் Marylebone கிளையும், சாக்லேட் உருகும் அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது.

சாக்லேட் தயாரிப்புகளுக்கு வெப்பமும் ஈரப்பதமும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக Hotel Chocolat தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரித்தானிய நுகர்வோர் ஏற்கனவே சாக்லேட் விலைகள் அதிகரிப்பதையும், சில தயாரிப்புகளின் அளவு குறைக்கப்படுவதையும் எதிர்கொண்டு வருகின்றனர். காலநிலை மாற்றம் தொடர்ந்தால் உணவுப் பாதுகாப்பு மேலும் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading