Sports

2028 ஒலிம்பிக் பதக்கக் கனவை நோக்கி பயணம்:  ருமேஷ் தரங்கவின் ‘ஊட்டச்சத்து நல்வாழ்வுப் பங்காளராக’ இணைந்தது CIC Holdings

 

நாட்டின் முன்னணி பன்முக நிறுவனக் குழுமமான சிஐசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி (CIC Holdings PLC), இலங்கையின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும், ஈட்டி எறிதல் உலக சம்பியனுமான ருமேஷ் தரங்க பத்திரகேவின் 2028 ஒலிம்பிக் போட்டிக்கான பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அவரது ‘உத்தியோகபூர்வ ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வு பங்களாராக’ (Official Nutritional & Wellness Partner) கைகோர்த்துள்ளது.

2028 ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தர இலக்கு வைத்துள்ள ருமேஷின் தடகளப் பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இக்கூட்டாண்மை அமைந்துள்ளது.

இந்தக் கூட்டாண்மை ஒரு சாதாரண விளையாட்டு அனுசரணை என்பதையும் தாண்டி, சர்வதேச அரங்கில் மிக உயர்ந்த நிலையை எட்டுவதற்குத் தேவையான பல வருடப் பயிற்சி, சுய ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றுடன் ருமேஷிற்குப் பக்கபலமாக நிற்பதையே வெளிப்படுத்துகிறது. ருமேஷ் தரங்கவின் உத்தியோகபூர்வ ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வுப் பங்காளராக, 2028 ஒலிம்பிக் போட்டியை நோக்கிய அவரது தயாரிப்புகளுக்கான ஊட்டச்சத்து, உடற்தகுதி மற்றும் ஒட்டுமொத்த நலன்களை CIC ஹோல்டிங்ஸ் பொறுப்பேற்று, ‘தேசத்தின் கனவுக்கு’ வலுச்சேர்க்கவுள்ளது.

இந்த நிலையில், 2026-ஆம் ஆண்டு பருவத்தில் சர்வதேச அளவில் ஈட்டி எறிதலில் முன்னணி வீரராகப் பரிணமித்துள்ள ருமேஷ் தரங்க, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரோம் டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் 92.62 மீற்றர் தூரத்தை எறிந்து போட்டி சாதனையுடன் இலங்கையின் தேசிய சாதனையை முறியடித்தார். இந்த ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க, இம்மாதம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான டயமண்ட் லீக் தடகளத் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து ஹங்கேரியில் நடைபெற்ற அங்குரார்ப்பண உலக தடகள ‘அல்டிமேட் சம்பியன்ஷிப்பிலும் சம்பியன் பட்டம் வென்ற அவர், ஜப்பானில் அண்மையில் நிறைவடைந்த  20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்தார்.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக விவசாயம், சுகாதாரம், நல்வாழ்வு மற்றும் தனிநபர் பராமரிப்பு போன்ற துறைகளின் ஊடாக இலங்கையர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்துள்ள CIC ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஒரு தேசிய கனவைச் சுமந்து செல்லும் ஒரு விளையாட்டு வீரருக்கு ஆதரவளிப்பதன் மூலம் தனது சேவையை மேலும் விரிவுபடுத்துகிறது.

இந்தக் கூட்டாண்மை குறித்து CIC ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி அரோஷன் சேரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “பல தலைமுறைகளாக இலங்கை மக்களின் வாழ்வை வளப்படுத்துவதிலும், சமூக முன்னேற்றத்திலும் CIC ஹோல்டிங்ஸ் முக்கிய பங்காற்றி வருகிறது. ருமேஷுடனான இந்தக் கூட்டாண்மை அந்த அர்ப்பணிப்பின் இயல்பான தொடர்ச்சியாகும். 2028 ஐ நோக்கிய அவரது பயணம் ஒழுக்கம், மன உறுதி மற்றும் அசாத்தியமான இலட்சியத்தை துரத்தும் துணிச்சலைக் பிரதிபலிக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு மேடையில் அவர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது, அவரது ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.” எனக் குறிப்பிட்டார்.

போட்டி நாளன்று மட்டுமன்றி, அதற்கு முன்பாக எடுக்கப்படும் தொடர்ச்சியான பயிற்சிகள், முறையான ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் ஊடாகவே நீண்டகால அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகிறது என்பதை வெளிப்படுத்தி, இளம் இலங்கை வீரர்களுக்கு ஊக்கமளிப்பதையும் இந்தக் கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், CIC ஹோல்டிங்ஸ் உடனான இந்தக் கூட்டாண்மை குறித்து ருமேஷ் தரங்க கருத்து தெரிவிக்கையில், “சர்வதேச அளவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது நான் பெருமையுடன் சுமக்கும் ஒரு பொறுப்பாகும். 2028 ஒலிம்பிக் நோக்கிய பயணம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முழுமையான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் CIC ஹோல்டிங்ஸ் நிறுவனம் எனது ஊட்டச்சத்து மற்றும் நல்வாழ்வுப் பங்காளராக இணைந்திருப்பது எனக்குப் பெரிய பலமாகும். இலங்கைக்கு வரலாற்றுச் சாதனை ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதே எனது கனவு. அந்தக் கனவை நம்பி, இந்தப் பயணத்தில் என்னோடு கைகோர்த்துள்ள CIC ஹோல்டிங்ஸ் நிறுவத்திற்கு னஎனது நன்றிகள்.” எனத் தெரிவித்தார்.

இக்கூட்டாண்மையின் ஊடாக, 2028 ஒலிம்பிக் போட்டியை நோக்கிய ருமேஷ் தரங்கவின் நீண்டகாலப் பயணத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதுடன், ஒரு வரலாற்றுச் சாதனைக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் பயிற்சிகளை இலங்கை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்க்க CIC ஹோல்டிங்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading