World

தெரசா மேவுக்கு எதிரான தீர்மானம் தோற்கடிப்பு!

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரசா மே ஆட்சி மீது மீண்டும் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது.

ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் அமைத்துள்ளது. அதில் கடந்த 1973ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தும் (பிரிட்டன்) அங்கம் வகித்து வருகிறது. ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் செயற்படுகிறது. அதில் இணைந்துள்ளதால் இங்கிலாந்து தனது தனித்தன்மையையும் இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு பிரிவினர் குற்றம்சாட்டினர்.

அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்சிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே. பிரெக்சிட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை மார்ச் 29ஆம் திகதிக்குள் முடிவு செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு இங்கிலாந்து வெளியேறுவதற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய பிரெக்சிட் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிராக 432 எம்.பி.க்களும், ஆதரவாக 202 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதன் மூலம் பிரதமர் தெரசா மே தரப்பு தோல்வி அடைந்தது.

இந்தத் தோல்வி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்ட இங்கிலாந்து பிரதமர் தெரசா மே-க்கு இது மிக பெரிய வீழ்ச்சியாக கருதப்பட்டது. இதில் பிரதமர் தெரசா மேயின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் பிரதமர் தெரசா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்தத் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அவர், “தெரசா மேயின் 2 ஆண்டு கால ஆட்சி தோல்வி அடைந்துவிட்டதால் அவர் மீது நம்பிக்கை இல்லை” என்றார்.

இதன்படி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் நேற்று விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்றது. அதில் தெரசா மேயின் தரப்புக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. இதனால் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரசா மே ஆட்சி மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் ஆட்சி தக்க வைக்கப்பட்டுள்ளது.

தெரசா மே ஆட்சியின் பதவிக் காலம் 2022 வரை உள்ளது. எனினும், அடுத்த பொதுத் தேர்தலை தமது கன்சர்வேடிவ் கட்சி தமது தலைமையில் சந்திக்காது என்று தெரசா மே ஏற்கனவே தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading